Fact check கச்சத்தீவு குறித்து வைகோ உண்மையில் கூறியது என்ன? முழு விவரம்!
கச்சத்தீவு குறித்து வைகோ அளித்த பேட்டியின் முழுமையான காணொலி வெளியிடப்படாமல் கட் செய்யப்பட்ட காணொலி மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது
கச்சத்தீவு எப்படி இலங்கையிடம் ஒப்படைக்கப்பட்டது என வெளியுறவுத்துறை அமைச்சகத்திடம் ஆர்.டி.ஐ. மூலம் பெற்ற தகவல்களை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டதையடுத்து, தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது.
மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாஜக, 1974 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது. தேர்தலுக்காக இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளதாக எதிர்தரப்பில் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில், கட்சத்தீவு குறித்து மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அளித்த பேட்டி சர்ச்சையாகியுள்ளது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோவிடம் கட்சத்தீவு குறித்து ஏ.என்.ஐ. செய்தி முகமை கருத்து கேட்டது. அதற்கு பதிலளித்த வைகோ, “காங்கிரஸ் அந்தக் காலத்தில் தமிழ்நாட்டை எல்லா சூழலிலும் வஞ்சித்தது.” என தெரிவித்த 10 நொடிகள் கொண்ட காணொலியை ஏ.என்.ஐ. தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டது.
வைகோவின் இந்த கருத்து கடுமையான சர்ச்சையை ஏற்படுத்தியது. ஏ.என்.ஐ. வெளியிட்ட அந்த 10 நொடி காணொலியை வைத்து இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ் கட்சியை அதே கூட்டணியை சேர்ந்த வைகோ விமர்சிப்பதாக பலரும் கருத்து தெரிவித்தனர். ஊடகங்கள் அனைத்தும் அவ்வாறே செய்திகளை வெளியிட்டன.
இந்த நிலையில், வைகோவின் முழு பேட்டியை வெளியிடாமல் கட் செய்யப்பட்ட வீடியோவை மட்டும் ஏ.என்.ஐ. வெளியிட்டுள்ளது தெரியவந்துள்ளது. வைகோவின் பேட்டியை சன் நியூஸ் தனது எக்ஸ் பக்கத்தில் முழுமையாக வெளியிட்டுள்ளது. அதில், “அந்த காலத்தில் காங்கிரஸ் கட்சி தமிழ்நாட்டை அனைத்து வகைகளிலும் வஞ்சித்தது. அதன்பிறகு, இந்த 10 ஆண்டுகள் நரேந்திர மோடியின் காலம். அவர் என்ன செய்து கொண்டிருந்தார். அவர் ஒரு துரோகி. தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்தவர். இந்தியாவுக்கு துரோகம் செய்தவர். இலங்கைக்கு துரோகம் செய்தவர். அவர்தான் நரேந்திர மோடி.” என வைகோ கூறும் முழு வீடியோவும் இடம்பெற்றுள்ளது.
பாஜக வாரிசு அரசியலுக்கு தக்க பதிலடி கொடுப்பேன்: கர்நாடகா முன்னாள் துணை முதல்வர் ஈஸ்வரப்பா!
இதுகுறித்து உண்மை சரிபார்ப்பு வல்லுநரான முகமது ஜுபேர், “ஏ.என்.ஐ. செய்தி ஆசிரியரான சிமித்தா பிரகாஷை குறிப்பிட்டு, நீங்கள் தான் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நரேந்திர மோடியை நம்பிக்கைத் துரோகி எனக் குறிப்பட்டதையும், தமிழ்நாட்டையும் இந்தியாவையும் அவர் வஞ்சித்து விட்டார் என வைகோ கூறும் முழுக் காணொலியைப் போட வேண்டாம் என ஏ.என்.ஐ.யிடம் கூறினீர்களா? ஏன் வேண்டுமென்றே கத்தரிக்கப்பட்ட காணொலியைப் பதிவேற்றம் செய்கிறீர்கள்.?” என கேள்வி எழுப்பியுள்ளார்.
இதன் மூலம், ஏ.என்.ஐ. வெளியிட்ட வைகோவின் பேட்டியானது முழுமையானது அல்ல; கத்தரிக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. கட்சத்தீவு தொடர்பான அவரது முழு பேட்டியில் பிரதமர் மோடியை துரோகி என கடுமையாக சாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.