Asianet News TamilAsianet News Tamil

FACT CHECK ரூ.500 நோட்டில் மகாத்மா காந்திக்கு பதில் ராமர் படம்?

ரூ.500 நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக கடவுள் ராமர் படம் பொறிக்கப்பட்ட நோட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக உலா வரும் தகவல் போலியானது என தெரியவந்துள்ளது

FACT CHECK Lord Ram to replace Mahatma Gandhi on Rs 500 currency notes smp
Author
First Published Jan 18, 2024, 1:29 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் புதிதாக ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயில் வருகிற 22ஆம் தேதி திறக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்படவுள்ளது. அன்றைய தினமே குழந்தை ராமர் சிலை பிரதிஷ்டை செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொள்ளவுள்ளார். ராமர் கோயில் திறக்கப்படுவதையொட்டி, பல்வேறு ஏற்பாடுகள் செய்யபட்டு வருகின்றன.

அந்தவகையில், ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ரூ.500 நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக கடவுள் ராமர் படம் பொறிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகள் வெளியிடப்பட உள்ளதாக சமூக வலைதளங்கள் புகைப்படத்துடன் கூடிய தகவல் ஒன்று உலா வருகிறது. அந்த ரூ.500 புகைப்படத்தில் மகாத்மா காந்திக்கு பதிலாக ராமர் இருக்கிறார். பின்பக்கத்தில், அயோத்தி ராமர் கோயில் மாதிரி புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பகவான் ராமர் படம் பொறிக்கப்பட்ட இந்த புதிய ரூ.500 நோட்டுகள் ஜனவரி 22ஆம் தேதியன்று நடைபெறவுள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகத்தையொட்டி வெளியிடப்படும் என அந்த தகவல் பரவி வருகிறது.

இதனை உண்மை என்று நம்பி பலரும் தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்து வரும் நிலையில், .500 நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக கடவுள் ராமர் படம் பொறிக்கப்பட்ட நோட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக உலா வரும் தகவலும், அந்த புகைப்படமும் போலியானது என தெரியவந்துள்ளது. அந்த புகைப்படம் ஃபோட்டோஷாப் பயன்படுத்தி போலியாக தயாரிக்கப்பட்டுள்ளதாக உண்மை கண்டறியும் இணையதளங்கள் கண்டறிந்து செய்தி வெளியிட்டுள்ளன.

மேலும் இதுபோன்ற கருப்பொருள்களுடன் புதிய நோட்டுகளை வெளியிடுவது குறித்து இந்திய ரிசர்வ் வங்கியோ (ஆர்பிஐ) அல்லது இந்திய அரசாங்கமோ எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை. அதேபோல், ராமர் கோவில் கும்பாபிஷேகம் ராம ஜென்மபூமி அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், ராமர் மற்றும் ராமர் கோயில் இடம்பெறும் புதிய நோட்டுகள் குறித்து அறக்கட்டளை சார்பிலும் எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இல்லை.

ராமர் கோயில் நினைவு தபால் தலைகளை வெளியிட்ட பிரதமர் மோடி!

ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ இணையதளம், குறிப்பாக 'உங்கள் நோட்டுகளை அறிந்து கொள்ளுங்கள்' பிரிவில், மகாத்மா காந்தியின் படம் மற்றும் செங்கோட்டையின் படம் பொறிக்கப்பட்ட 500 ரூபாய் நோட்டுக்கான விவரக்குறிப்புகளே இன்னும் உள்ளன. புதிய புகைப்படம் பற்றிய எந்த தகவலும் அதில் இல்லை.

எனவே, ரூ.500 நோட்டில் மகாத்மா காந்திக்கு பதிலாக கடவுள் ராமர் படம் பொறிக்கப்பட்ட நோட்டுகள் வெளியிடப்படவுள்ளதாக உலா வரும் தகவலும், புகைப்படமும் போலியானது என தெரியவந்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios