Fact Check கங்கனா ரணாவத்துக்கு பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் பாஜகவில் சீட் கிடைத்ததா?
பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் தனக்கு சீட் கிடைத்தது என தவறான தகவலை நடிகையும், அக்கட்சியின் வேட்பாளருமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார்
நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் 2024க்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நாடு முழுவதும் 7 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில், இமாச்சலப்பிரதேச மாநிலம் மண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட பாலிவுட் நடிகை கங்கனா ரணாவத்துக்கு பாஜக சீட் வழங்கியுள்ளது.
அண்மையில் அம்மாநிலத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்ட கங்கனா ரணாவத், பெண்கள் இடஒதுக்கீடு மசோதா காரணமாக இமாச்சல பிரதேசம் மண்டி தொகுதியில் தேர்தலில் போட்டியிட பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சீட் பெற்றதாக கூறினார்.
இமாச்சல பிரதேசம் மண்டி மக்களவைத் தொகுதிக்குட்பட்ட பால்ஹ் கிராமத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய கங்கனா ரணாவத், “மக்களவையில் மகளிருக்கு 30% இடஒதுக்கீடு வழங்கும் மகளிர் இடஒதுக்கீடு மசோதாதான் மண்டியைச் சேர்ந்த உங்கள் மகள் இந்த நிலைக்கு வரக் கரணம். அதனால்தான் இந்த மேடையில் இன்று நான் நின்று கொண்டிருக்கிறேன்.” என்றார்.
இந்த நிலையில், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் தனக்கு சீட் கிடைத்தது என நடிகையும், அக்கட்சியின் வேட்பாளருமான கங்கனா ரணாவத் கூறியது தவறான தகவல் என தெரியவந்துள்ளது. கங்கனா ரணாவத் தெரிவித்த கருத்தை பூம் செய்தி இணையதளத்தின் உண்மை சரிபார்க்கும் குழு ஆராய்ந்து அவர் தெரிவித்த கூற்று தவறானது என நிரூபித்துள்ளது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா இன்னும் நடைமுறைப்படுத்தப்படவில்லை எனவும், 2029 ஆம் ஆண்டு வரையில் அது நிறைவேற்றப்படாது என்றும் பூம் கண்டறிந்துள்ளது. நாரி சக்தி வந்தன் ஆதினியம் எனப்படும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவானது, மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு வழங்க வழிவகை செய்கிறது.
மகளிர் இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றத்தில் முதன்முதலில் அறிமுகப்படுத்தப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு, கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் 20ஆம் தேதி மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. செப்டம்பர் 22ஆம் தேதி, மாநிலங்களவையில் ஒரு மனதாக அந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட நிலையில், இந்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டு செப்டம்பர் 28ஆம் தேதி ஒப்புதலும் அளிக்கப்பட்டது.
அதன்படி, சட்டமாக மாறுவதற்கான அனைத்து தேவைகளையும் மகளிர் இட ஒதுக்கீடு மசோதா பூர்த்தி செய்துள்ளது. ஆனால், இது இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறு வரையறை செயல்முறைகள் முடிந்த பிறகே இந்த மசோதா நடைமுறைக்கு வரும். கொரோனா தொற்று நோய் காரணமாக 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை மத்திய அரசு இன்னும் முடிக்கவில்லை. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில், 2026ஆம் ஆண்டுக்கு பிறகே இந்த தொகுதி மறு வரையறை செயல்முறை நடக்கவுள்ளது. அது நடந்து முடிந்த பின்னரே, பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா நடைமுறைக்கு வரும்.
செப்டம்பர் 20, 2023 அன்று லோக்சபாவில் பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, 2024 பொதுத் தேர்தலுக்குப் பிறகுதான் தொகுதி மறுவரையறை செய்யப்படும் என்றும், மகளிர் இடஒதுக்கீடு மசோதா அமலுக்கு வர குறைந்தபட்சம் 2029ஆம் ஆண்டாகும் என கூறினார் என்பது நினைவுகூரத்தக்கது.
இதன் மூலம், பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா மூலம் மக்களவைத் தேர்தலில் போட்டியிட பாஜகவில் தனக்கு சீட் கிடைத்தது என தவறான தகவலை நடிகையும், அக்கட்சியின் வேட்பாளருமான கங்கனா ரணாவத் தெரிவித்துள்ளார் என தெரியவந்துள்ளது.