2008 மும்பை தாக்குதல் குற்றவாளி தஹாவூர் ராணா 14 வருட சட்ட போராட்டத்திற்கு பிறகு அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டார். டெல்லியில் பலத்த பாதுகாப்புடன் தரையிறங்கிய ராணாவிடம் இந்திய அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்த உள்ளனர்.
2008ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்ற 26/11 தாக்குதலில் மூளையாகச் செயல்பட்ட பயங்கரவாதி தஹாவூர் ராணா அமெரிக்காவில் இருந்து இந்தியாவுக்கு நாடுகடத்தப்பட்டுள்ளார். 14 ஆண்டுகால சட்டப் போராட்டத்திற்குப் பிறகு அவர் பலத்த பாதுகாப்புடன் இந்தியாவுக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
64 வயதான தஹாவூர் ராணாவை அழைத்துவந்த சிறப்பு விமானம் டெல்லியில் தரையிறங்கியது. இந்தியாவுக்கு வந்தவுடனேயே இந்திய அதிகாரிகள் அவரிடம் தீவிர விசாரணையைத் தொடங்குவார்கள் என்று கூறப்படுகிறது. ராணாவின் வருகையை முன்னிட்டு டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
அமித் ஷா ஆலோசனை:
பாதுகாப்பு மற்றும் விசாரணைத் திட்டத்தை இறுதி செய்ய உள்துறை அமைச்சர் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் புதன்கிழமை மாலை ஆலோசனை நடத்தினர்.
இந்தியாவில் தரையிரங்கிய ராணா நேரடியாக திகார் சிறையில் உள்ள உயர் பாதுகாப்பு அறைக்கு அழைத்துச் செல்லப்படுவார். பாதுகாப்புக் கவலைகள் மற்றும் வழக்கின் தன்மை காரணமாக, அவரது காவல் ரகசியமாக நடத்தப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ரகசிய விசாரணை:
"ஏற்கெனவே விரிவாக விசாரணை நடைபெற்றுள்ளது. அவரை கண்டுபிடிப்பது எளிதான காரியமாக இல்லை. நம்மை எப்படித் தவறாக வழிநடத்தித் தப்பிப்பது எப்படி என்பது அவருக்குத் தெரியும். எனவே நடவடிக்கைகள் நிதானமாகவும் ரகசியமாகவும் மேற்கொள்ளப்படும்" என்று ஒரு மூத்த அதிகாரி தெரிவிக்கிறார்.
என்.ஐ.ஏ. அதிகாரிகள், இரண்டு புலனாய்வு அமைப்புகள் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் குற்றவியல் துறையில் பயிற்சி பெற்ற தடயவியல் உளவியலாளர்கள் அடங்கிய சிறப்பு விசாரணைக் குழுவால் ராணா விசாரிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 26/11 தாக்குதலில் யாருக்கெல்லாம் தொடர்பு இருந்தது என்பதைக் கண்டறிவது விசாரணையின் மையமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
