நாங்களா கொடுமைப்படுத்துறோம்? மாலத்தீவு அதிபரை சாடிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர்!
கொடுமைப்படுத்துபவர்கள் 4.5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொடுக்கமாட்டார்கள் என வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவை கடுமையான சாடியுள்ளார்
மாலத்தீவின் புதிய அதிபராக முகமது முய்ஸு தேர்வானதில் இருந்தே அந்நாட்டுடனான இந்தியாவின் உறவு சுமூகமாக இல்லை. மாலத்தீவின் புதிய அரசாங்கம் சீனாவுக்கு ஆதரவாக உள்ளதாகவும், இது தமது தேசிய பாதுகாப்பு குறித்த கவலையை அதிகரித்துள்ளதாகவும் இந்தியா வருத்தம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக சீன உளவுக் கப்பலை அதன் தலைநகர் மாலேயில் சர்ச்சைக்குரிய வகையில் நிறுத்திவைத்த பிறகு, இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவுகள் மேலும் மோசமடைந்தன. அதேபோல், பிரதமர் மோடியின் லட்சத்தீவு பயணம் குறித்து மாலத்தீவு அமைச்சர்களின் தரக்குறைவான விமர்சனங்கள், இரு நாடுகளுக்கும் இடையேயான ராஜதந்திர உறவில் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.
இதனிடையே, ஒரு சிறிய தேசமாக இருப்பதால் மாலத்தீவை கொடுமைப்படுத்துவதற்கான உரிமத்தை மற்றவர்களுக்கு வழங்க முடியாது என அந்நாட்டு அதிபர் முகமது முய்ஸு தெரிவித்தார். அவரது கருத்து, இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியா ஒரு கொடுமைக்கார நாடாக உள்ளது என்ற பிம்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
நீங்கள் ஒரு சாதாரண நபர் கிடையாது: உதயநிதி ஸ்டாலின் சனாதன வழக்கில் உச்ச நீதிமன்றம் கருத்து!
இந்த நிலையில், டெல்லியில் புத்தக வெளியீட்டு விழாவின் போது பேசிய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், மாலத்தீவு அதிபர் முகமது முய்ஸுவின் கருத்தை கடுமையாக எதிர்த்தார். மேலும், அண்டை நாடுகளுக்கு இந்தியாவின் குறிப்பிடத்தக்க நிதி உதவி மற்றும் ஆதரவு குறித்தும் அவர் எடுத்துரைத்தார்.
கொடுமைப்படுத்துபவர்கள் நெருக்கடிகளின் போது 4.5 பில்லியன் அமெரிக்க டாலர் உதவி, தடுப்பூசிகளை வழங்க மாட்டார்கள் எனவும் அவர் கூறினார். அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளில் நேர்மறையான மாற்றங்கள் குறித்தும் ஜெய்சங்கர் வலியுறுத்தினார்.
இந்தியா மற்றும் அதன் அண்டை நாடுகளுக்கு இடையேயான இணைப்பு மற்றும் ஒத்துழைப்பில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விரிவாக எடுத்துரைத்தார். மக்கள், வர்த்தகம் மற்றும் முதலீடுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக நேபாளம், வங்கதேசம், இலங்கை மற்றும் மாலத்தீவுகளுடனான நேர்மறையான உறவுகளை அவர் குறிப்பிட்டார்.