கராச்சி துறைமுகத்திற்கு அருகில் வெடிச்சத்தங்கள் கேட்டன. இந்தியா தாக்கியதா என்பது உறுதியாகவில்லை. ஐஎன்எஸ் விக்ராந்த் உட்பட இந்திய போர் கப்பல்கள் அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில், தெற்கு பாகிஸ்தானின் கராச்சி நகரத்தில் துறைமுகத்திற்கு அருகில் வெடிச்சத்தங்கள் கேட்டுள்ளன. ஆனால், இந்தியா கராச்சியின் துறைமுகத்தைத் தாக்கியதாக அதிகாரபூர்வமான தகவல் எதுவும் வெளியாகவில்லை.
முன்னதாக மேற்கு கடற்படை கமாண்ட் ஐஎன்எஸ் விக்ராந்த் உள்பட இந்திய கடற்படையின் போர் கப்பல்களை அரபிக் கடலில் நிறுத்திவைத்திருப்பதாக இந்திய கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தன.
கடற்படை நிறுத்தியுள்ள போர் கப்பல்களில் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பலும் இருப்பதாகக் கூறப்படுகிறது. ஐஎன்எஸ் விக்ராந்த் என்பது 2022 இல் இருந்து இயக்கப்படும் ஒரு விமானம் தாங்கி கப்பல் ஆகும்.
பாகிஸ்தானின் முயற்சிகள் முறியடிப்பு:
இந்தியக் கடற்படையின் இந்த நடவடிக்கை, பாகிஸ்தானின் தாக்குதல்களுக்கு பதிலடி கொடுக்க இந்தியாவின் தரைப்படை, விமானப்படை மற்றும் கடற்படை ஆகிய முப்படைகளும் ஆயத்தமாக இருப்பதைக் காட்டுகிறது.
முன்னதாக, ஜம்மு காஷ்மீரில் பாகிஸ்தான் ஏவிய குறைந்தது 8 ஏவுகணைகளையும், ராஜஸ்தானின் ஜெய்சால்மரில் 30 ஏவுகணைகளையும் இந்தியா சுட்டு வீழ்த்தியது. பல எல்லை மாநிலங்களில் பாகிஸ்தானிய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளன.
ஒரு பாகிஸ்தானிய F16 ஜெட் விமானமும் இரண்டு JF-17 போர் விமானங்களும் இந்தியாவின் ஏவுகணை பாதுகாப்பு அமைப்பால் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அறியப்படுகிறது. இரண்டு பாகிஸ்தான் விமானிகளும் இந்திய ராணுவத்திடம் உயிருடன் பிடிபட்டுள்ளனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.


