ஆம் ஆத்மி கட்சிக்கு காலிஸ்தான் அமைப்பு நிதியுதவி; பரபரப்பை ஏற்படுத்தும் குர்பத்வந்த் சிங் பன்னுன் வீடியோ!!
குற்றச்சாட்டுகள் மற்றும் அரசியல் சூறாவளி பிரச்சாரங்களுக்கு இடையே அமெரிக்காவை தளமாகக் கொண்டு செயல்பட்டு வரும் காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுனின் திடுக்கிடும் குற்றச்சாட்டு ஆம் ஆத்மி கட்சிக்கு (ஏஏபி) நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.
மதுபான ஊழலில் சிக்கி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் அமலாக்கத்துறை வலையத்தில் இருக்கிறார். இந்த மக்களவை தேர்தலில் தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட முடியாத சிக்கலில் இருக்கிறார். இந்த நிலையில் ஆம் ஆத்மி கட்சி மீது காலிஸ்தான் பயங்கரவாதி குர்பத்வந்த் சிங் பன்னுன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
கடந்த 2014 முதல் 2022 ஆம் ஆண்டுக்குள் இடைப்பட்ட காலகட்டத்தில் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பு ஆம் ஆத்மி கட்சிக்கு 16 மில்லியன் டாலரை வாரி வழங்கி இருப்பதாக பன்னூன் தெரிவித்துள்ளார். மேலும், ஆம் ஆத்மி கட்சியின் நிதி நிலைப்பாடு மற்றும் தீவிரவாத குழுக்களுடன் உடனான நெருக்கம் குறித்தும் குர்பத்வந்த் சிங் பன்னுன் கேள்வி எழுப்பி உள்ளார்.
பயங்கரவாதி தேவிந்தர் பால் சிங் புல்லரை விடுவிக்க டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பண பேரம் பேசியதாக ஒரு அதிர்ச்சியூட்டும் கருத்தையும் பன்னுன் முன் வைத்துள்ளார். டெல்லியில் 1993 ஆம் ஆண்டு நடந்த குண்டுவெடிப்பில் முக்கிய குற்றவாளியாக பார்க்கப்பட்டவர் புல்லர். இந்திய வரலாற்றில் நடந்த பயங்கரவாதத்தின் ஒரு பக்கமாக புல்லர் இருந்து வருகிறார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் ஒரு கடுமையான குற்றச்சாட்டை பன்னுன் தெரிவித்துள்ளார். 2014 ஆம் ஆண்டு நியூயார்க்கில் இருக்கும் குருத்வாரா ரிச்மண்ட் ஹில், கெஜ்ரிவால், காலிஸ்தான் சார்பு சீக்கியர்களுக்கும் இடையே ஒரு ரகசிய சந்திப்பு நடந்ததாகக் குற்றம் சாட்டியுள்ளார். இந்த சந்திப்பின் போது, நிதி உதவிக்கு ஈடாக பயங்கரவாதி புல்லரை விடுவிக்க கெஜ்ரிவால் உறுதியளித்ததாக பன்னுன் தெரிவித்துள்ளார்.
இந்த நெருக்கடிகளுக்கு மத்தியில் அமலாக்கத்துறை பிடியில் இருக்கும் தங்களது தலைவருக்கான குரலை ஆம் ஆத்மி தொண்டர்கள் அதிகரித்து வருகின்றனர். மெயின் பி கெஜ்ரிவால் என்ற பிரச்சாரத்தை துவக்கியுள்ளனர். தங்களது வாகனங்களில் ஆம் ஆத்மிக்கும், அந்தக் கட்சியின் ஒரே முகமாக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் ஆதரவு கேட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் களத்தில் உள்ளனர். கட்சிக்கான ஒற்றுமையை பறைசாற்றி வருகின்றனர்.
இத்துடன் வரும் மார்ச் 31 ஆம் தேதி இந்தியா கூட்டணி கட்சியினர் டெல்லி ராம்லீலா மைதானத்தில் பேரணி நடத்துகின்றனர். இந்தப் பேரணியில் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி தலைவர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பேரணி நடத்துவதற்கு தனக்கு அரவிந்த் கெஜ்ரிவாலிடம் இருந்து ஒப்புதல் கிடைத்து இருப்பதாக ஆம் ஆத்மி தேசிய பொதுச்செயலாளர் டாக்டர் சந்தீப் பதக் கூறியுள்ளார்.