பாஜக மோடி அரசு பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமரும் பொருளாதார நிபுணருமான மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.


இந்திய பொருளாதாரம் சரிவை சந்தித்திருக்கிறது. தள்ளாடும் ஆட்டோ மொபைல் துறை, ரிசர்வ் வங்கியின் உபரி நிதியை வாங்கிய மத்திய அரசு, நஷ்டத்தில் இயங்கும் வங்கிகள் இணைப்பு, ஜிடிபி எனப்படும் உள்நாட்டு மொத்த உற்பத்தி சரிவு என நாளொருவண்ணம் பொழுதொருமேனியாக இந்திய பொருளாதாரத்தைப் பற்றி எதிர்மறையான செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. பொருளாதார சரிவை சரி செய்ய மோடி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருவதாகக் கூறிவருகிறது.

 
இந்நிலையில் முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங், இந்திய பொருளாதாரம் குறித்து தன் கவலையை அறிக்கையாக வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், “இந்திய பொருளாதாரத்தின் நிலை மிகவும் கவலை அளிக்கும் நிலையில் உள்ளது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் ஜிடிபி வளர்ச்சி 5 சதவீதமாக உள்ளது. இது இந்தியாவின் பொருளாதாரம் நீண்ட காலமாக மந்தநிலையில் இருப்பதை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.


இந்தியா எப்போதுமே வேகமாக வளரும் திறன் பெற்ற நாடு. ஆனால், நரேந்திர மோடி அரசின் மோசமான செயல்பாடுகள் காரணமாக பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பண மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜி.எஸ்.டி. போன்ற திட்டங்கள் இந்திய பொருளாதாரத்தை மந்த நிலைக்கு தள்ளியிருக்கிறது. அதிலிருந்து இந்திய பொருளாதாரம் இன்னும் மீளவில்லை என்பதைக் காட்டுகிறது. நாட்டின் பொருளாதார மந்தநிலை இனியும் தொடரக் கூடாது.
மோடி அரசு பழிவாங்கும் அரசியல் நடவடிக்கைகளை கைவிட்டுவிட்டு, பொருளாதாரத்தை மீட்கும் நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்.” என்று மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.