Ex judge Karnan complains of chest pain admitted to hospital

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவின் பேரில் கோவை மாவட்டம் மலுமிச்சைபட்டியில் வைத்து கொல்கத்தா போலீசாரால் கைது செய்யப்பட்டார் ஓய்வு பெற்ற நீதிபதி கர்ணன்.

கோவையில் இருந்து விமானம் மூலம் சென்னை அழைத்து வரப்பட்ட கர்ணன், பிறகு கொல்கத்தா கொண்டு செல்லப்பட்டார். 6 மாத சிறைத்தண்டனையின் படி அவரை பிரசிடென்சி சிறையில் அடைக்க ஏற்பாடுகள் நடைபெற்று வந்த நிலையில் அவருக்கு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனைத் தொடர்ந்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் ரத்த அழுத்தம் அதிகமாக இருந்ததால் அதற்குத் தேவையான சிகிச்சைகளும் அளிக்கப்பட்டன.

சற்றே உடல் நலம் தேறி வந்த நிலையில் கர்ணனுக்கு நேற்று மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் கொல்கத்தா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பரிசோதனைகள் முடிவுகள் சிறையில் அடைக்க முடியாத அளவுக்கு இருந்ததால், மருத்துவமனையிலேயே தங்க வைக்கப்பட்டு சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன.