பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) சான்றிதழ் பெற்ற மாணவர்கள், நீட் முதுநிலை தேர்வில் குறைந்த ரேங்க் பெற்றதால், கோடிக்கணக்கான ரூபாய் கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்பில் சேருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீடு சான்றிதழ்களின் நம்பகத்தன்மை குறித்து நாட்டில் தற்போது பெரும் சர்ச்சை கிளம்பியுள்ளது. EWS பிரிவைச் சேர்ந்த சுமார் 140 மாணவர்கள், தனியார் கல்லூரிகளில் அதிகமாக கட்டணம் செலுத்தி மருத்துவப் படிப்பில் சேர்ந்துள்ளனர்.
ஆண்டுக்கு ₹8 லட்சத்துக்கும் குறைவாகக் குடும்ப வருமானம் உள்ளதாகச் சான்றிதழ் பெற்ற இவர்கள், நிர்வாக மற்றும் வெளிநாடு வாழ் இந்தியர் (NRI) ஒதுக்கீட்டில் முதுநிலை மருத்துவப் படிப்புகளில் (PG Clinical Specialties) சேர ஆண்டுக்கு ரூ.25 லட்சத்தில் இருந்து ரூ.1 கோடிக்கும் அதிகமாகக் கல்விக் கட்டணம் செலுத்தியுள்ளனர்.
குறைந்த ரேங்க், அதிக கட்டணம்
முதுநிலை நீட் தேர்வில் (NEET PG) குறைந்த தரவரிசை பெற்ற மாணவர்கள், முதலில் EWS பிரிவின் கீழ் விண்ணப்பிக்கின்றனர்.
தரவரிசை மிகவும் குறைவாக இருக்கும்போது, இவர்கள் திடீரென NRI-களாகவோ அல்லது நிர்வாக ஒதுக்கீட்டின் கீழோ மாறி, ஆண்டுக்கு கோடிக்கணக்கான கட்டணத்தைச் செலுத்தி, மருத்துவக் கல்லூரிகளில் சேருவதாகப் முதுநிலை பயிற்சி மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
"இவர்கள் EWS பிரிவினராக விண்ணப்பித்து, குறைந்த ரேங்க் வந்தவுடன், பல கோடிகள் கட்டணம் செலுத்தி NRI ஒதுக்கீட்டிலோ அல்லது நிர்வாக ஒதுக்கீட்டிலோ சேருகிறார்கள். மொத்தப் படிப்பிற்கும் ₹1 கோடிக்கும் மேல் செலவழிக்க முடியும் என்றால், இவர்களுக்கு எப்படி EWS சான்றிதழ் கிடைத்தது? இது இந்தியாவில் மட்டுமே நடக்க முடியும்" என்று ஒரு முதுநிலை பயிற்சி மருத்துவர் தெரிவித்துள்ளார்.
நீட் முறைகேடுகள்
கடந்த ஆண்டும் இதேபோன்ற முறைகேடு நடந்ததாகவும், ஆனால் அரசு இது குறித்து எந்த விசாரணையும் நடத்தவில்லை என்றும், இதனால் தகுதியுள்ள ஏழைக் குழந்தைகளின் வாய்ப்பு பறிபோவதாகவும் மருத்துவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
நீட் தரவரிசை 1.1 லட்சத்துக்கும் குறைவாகப் பெற்ற ஒரு EWS மாணவர், பெலகாவி ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரியில் MD தோல் நோய் நிபுணர் (Dermatology) படிப்பை NRI ஒதுக்கீட்டில் எடுத்துள்ளார். இந்தப் படிப்பிற்கான ஆண்டு கல்விக் கட்டணம் ₹1 கோடிக்கும் அதிகம்.
நீட் தரவரிசை 84,000-க்கும் குறைவாகப் பெற்ற மற்றொரு EWS மாணவர், புதுச்சேரி விநாயகா மிஷன்ஸ் மருத்துவக் கல்லூரியில் MD பொது மருத்துவம் (General Medicine) படிப்பை NRI ஒதுக்கீட்டில் தேர்ந்தெடுத்துள்ளார். இதன் ஆண்டு கல்விக் கட்டணம் ₹55 லட்சத்துக்கும் அதிகம்.
பிற கல்லூரிகளில்
சந்தோஷ் மருத்துவக் கல்லூரியில் (Santosh Medical College) ரேடியோ டயக்னோசிஸ் (ஆண்டுக்கு ₹76 லட்சம்), பொது மருத்துவம் மற்றும் மகப்பேறியல் மற்றும் மகளிர் மருத்துவம் (ஆண்டுக்கு ₹50 லட்சம்) போன்ற படிப்புகளில் மூன்று EWS மாணவர்கள் சேர்ந்துள்ளனர்.
நவி மும்பையில் உள்ள டாக்டர் டி.ஒய். பாட்டீல் மருத்துவக் கல்லூரியில் (Dr DY Patil Medical College), பொது மருத்துவ நிர்வாக ஒதுக்கீட்டில் உள்ள 16 இடங்களில் நான்கு இடங்களை EWS மாணவர்கள் பிடித்துள்ளனர். இதன் ஆண்டு கல்விக் கட்டணம் ₹48.5 லட்சம்.
EWS ஒதுக்கீடும் விமர்சனங்களும்
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகள் மற்றும் கல்லூரிகளில் மொத்தம் 52,000-க்கும் மேற்பட்ட முதுநிலை மருத்துவ இடங்கள் (MD, MS & PG டிப்ளமோ) உள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் நடந்த நீட் முதுநிலை நுழைவுத் தேர்வில் 2.4 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர், அதில் சுமார் 1.3 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றனர். முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்து சுமார் 27,000 மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த வருமானம் உள்ளதாகச் சான்றிதழ் பெற்ற மாணவர்கள் கோடிக்கணக்கில் கட்டணம் செலுத்தி படிப்பது, உண்மையான ஏழை மாணவர்களின் வாய்ப்பை மறுப்பதாகவும், இது EWS இடஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கத்தையே சீர்குலைப்பதாகவும் சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த மோசடி குறித்து மத்திய, மாநில அரசுகள் உடனடியாக விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.


