evm problem
தேர்தலில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லு முல்லு நடக்க சாத்தியக்கூறுகள் இருக்கிறதா? என்பது குறித்து எழுப்பப்பட்ட சந்தேகத்துக்கு விளக்கம் அளிக்க தேர்தல் ஆணையத்துக்கும் , மத்தியஅரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.
பகுஜன் சமாஜ் வழக்கு
உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு எந்திரங்களில் தில்லுமுல்லு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி, மாயாவதிதலைமையிலான பகுஜன்சமாஜ் கட்சி சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டு இருந்தது.

இதற்கிடையே, வாக்குப்பதிவு எந்திரத்தில் யாரேனும் தில்லுமுல்லு செய்யமுடியுமா? என்றும் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக சவாலும் நேற்று முன் தினம் விட்டு இருந்தது.
விசாரணை
இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஜே. செலமேஸ்வர், அப்துல் நசீர்ஆகியோர் முன் பகுஜன் சமாஜ் கட்சி தாக்கல் செய்திருந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் மூத்த வழக்கறிஞரும், காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரம் ஆஜராகி வாதாடினார்.

காகித தணிக்கை
அப்போது அவர் வாதிடுகையில், “ மனிதனால் கண்டுபிடிக்கப்பட்ட எந்த தொழில்நுட்பத்தையும், மற்றொருவரால் அதை சேதப்படுத்த முடியும். இந்த மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்திலும் இதுபோன்ற சந்தேகங்களை எழுப்ப ஏராளமான முகாந்திரங்கள் உள்ளன. நாட்டில் உள்ள பெரும்பான்மையான அரசியல் கட்சிகளும் இந்த மின்னணு எந்திரத்தை குறை கூறுகின்றன. காகித தணிக்கை முறை என்பது அவசியம்’’ என்றார்.
கபில் சிபல்
காங்கிரஸ் கட்சி சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், “ இந்த விஷயத்தில் காங்கிரஸ் கட்சியும் தலையிடும் எந்த தொழில்நுட்பத்தையும் சேதப்படுத்த முடியும். இது இப்போது மிகவும் கவலை தரும் விஷயம். ஆதலால், மின்னணு எந்திரத்தில் வாக்களித்தபின், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் காகித தணிக்கை முறை(வி.வி.பி.ஏ.டி.) அவசியம்’’ என்றார்.

நிதிவசதி இல்லை
அதற்கு தேர்தல் ஆணையத்தின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர் கூறுகையில், “ மின்னணு எந்திரத்தில் வாக்களித்தபின், யாருக்கு வாக்களித்தோம் என்பதை சரிபார்க்கும் காகித தணிக்கை எந்திரத்தை வாங்குவதற்கு போதுமான நிதியில்லை. அரசிடம் கேட்டு இருக்கிறோம். இப்போதுள்ள நிலையில் 3 லட்சம் காகித தனிக்கை எந்திரங்கள் தேவை. அதற்கு ரூ.3 ஆயிரம் கோடி வேண்டும் ’’ என்றார்.
10 முறை கடிதம்
அப்போது பேசிய ப.சிதம்பரம் கூறுகையில், “ தேர்தல் ஆணையம் காகித தணிக்கை முறை எந்திரத்தை வாங்குவதற்கு நிதி உதவி கேட்டு 10 முறை அரசுக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதிவிட்டது. பிரதமருக்கும் தேர்தல் ஆணையர் கடிதம் எழுதிவிட்டார்.
சந்தேகம் உருவாகும்
தணிக்கை முறை எந்திரம் இல்லாமல், மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களின் நம்பகத்தன்மையில் சந்தேகம் உருவாகும். வாக்களிக்கும் முறையில் நம்பகத்தன்மையையும், துல்லியத் தன்மையையும் உறுதிப்படுத்த, காகித தணிக்கை முறை அவசியம். ஏனென்றால், எந்திரத்தின் சாப்ட்வேர், ஹார்டுவேர் எளிதாக சேதப்படுத்திவிட முடியும் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
அறியமுடியாது
காகித தணிக்கை முறை இல்லாமல், ஒரு வாக்காளர் எந்த வேட்பாளருக்கு யாருக்கு தனது வாக்கை அளித்து இருக்கிறேன் என்று தெரிந்துகொள்ள முடியாது. வாக்குப்பதிவு எந்திரத்தில் பொத்தான் அழுத்தினால், வாக்கு பதிவான சத்தம் மட்டுமே கேட்கும். ஆனால், சந்தேகம் என்பது இருக்கும்’’ என்றார்.
அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், “ எந்த விதத்தில் உங்களுக்கு சந்தேகம் இருக்கிறது, எந்த அடிப்பையில் சந்தேகப்படுகிறீர்கள்’’ என்றார்.

சேதப்படுத்த முடியும்
அதற்கு பதில் அளித்த ப.சிதம்பரம், “ மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்பது எந்திரம். ஒருவர் தயாரித்ததை மற்றொருவர் சேதப்படுத்த முடியும். இது ஹேக்செய்வது போன்றதாகும்’’ என்றார்.
இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், “ தேர்தலின் போதுவாக்குச்சாவடியை கைப்பற்றுதல் உள்ளிட்ட வன்முறைகளைத் தடுக்கவே மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கொண்டு வரப்பட்டன. அந்த தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் முயற்சிகள் நடந்து வருகின்வன. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையமும், மத்திய அரசும் 3 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.
வழக்கின் அடுத்த விசாரணை மே 8-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
