மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக பாஜக நிறுவன தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளதாக பாஜக நிறுவன தின நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சி கடந்த 1980 ஆம் ஆண்டு ஏப்ரல் 6 ஆம் தேதி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் 42 ஆம் ஆண்டு நிறுவன நாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த தினத்தை பாஜகவினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர். மேலும் நாடு முழுவதும் இன்று தொடங்கி வரும் 20 ஆம் தேதி வரை சமூக நீதிக்கான நிகழ்ச்சிகளை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. டெல்லி பாஜக தலைமையத்தில் நடைபெற்ற நிறுவன தின நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்துக்கொண்டு பேசினார். அப்போது, பாஜகவின் ஒவ்வொரு தொண்டரும் இந்திய நாட்டின் கனவுகளின் பிரதிநிதிகள்.

மாநிலங்களவையில் பாஜக உறுப்பினர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியுள்ளது. கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு கட்சியின் எம்பிக்களின் எண்ணிக்கை 100-ஐ எட்டியுள்ளது. நாட்டுக்காக நம்மை அர்ப்பணிக்க வேண்டும். உலகம் முழுவதும் பரவியுள்ள பாஜகவின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, கட்ச் முதல் கோஹிமா வரை அனைத்து மக்களுக்காகவும் பாரதிய ஜனதா கட்சி தொடர்ந்து பாடுபடும். உலகளாவிய கண்ணோட்டத்தில் அல்லது தேசியக் கண்ணோட்டத்தில், ஒவ்வொரு பாஜக தொண்டரின் பொறுப்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

எவ்வித அச்சமோ அழுத்தமோ இல்லாமல், தனது சொந்த நலன்களுக்காக உறுதியுடன் இந்தியா நிற்கிறது. உலகம் முழுவதையும் இரண்டு எதிரெதிர் துருவங்களாகப் பிரித்து பார்த்தால், இந்தியா ஒரு துருவமாகப் பார்க்கப்படுகிறது. மன உறுதியுடன் மனிதநேயம் பேசக்கூடிய நாடாக இந்தியா உள்ளது. நம்முடைய அரசான தேசிய நலனை முதன்மைப்படுத்தி செயல்பட்டு வருகிறது. நாட்டிற்கான கொள்கைகள், நோக்கங்கள், முடிவெடுக்கும் சக்தி போன்றவற்றை கட்டமைத்து வருகிறோம். அதனை நிறைவேற்றி வருகிறோம் என்று தெரிவித்தார். மேலும் இந்த விழாவில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.
