எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அனில் அம்பானி குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் 4 வாரத்திற்குள் ரூ.453 கோடியை வழங்காவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்துள்ளனர். 

ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் மீது  எரிக்சன் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் ரூ.550 கோடி கடன் பாக்கியை தர வேண்டும் என உச்சநீதிமன்றம் சமீபத்தில் உத்தரவிட்டிருந்தது. 
 
இதனையடுத்து ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனம் திவாலாகி விட்டதாகவும், தங்கள் நிறுவன சொத்துக்களை விற்க, கடனை திருப்பிச் செலுத்த முடிவு செய்திருப்பதாக அனில் அம்பானி அறிவித்திருந்தார். ஆனால் எவ்வளவு முயன்றும் சொத்துக்களை விற்க முடியவில்லை. ஆகையால் குறிப்பிட்ட தேதியில் தவணை தொகையை ரிலையன்ஸ் நிறுவனம் செலுத்தவில்லை. இதனையடுத்து  ரிலையன்ஸ் தலைவர் அனில் அம்பானி, அதிகாரிகள் சதீஷ் சேத், சாயா விரானி ஆகிய 3 பேர் மீதும் எரிக்சன் இந்தியா நிறுவனம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது.

 

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் நாரிமன் மற்றும் வினீத் சரண் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது. இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு இன்று வெளியாகியுள்ளது. அதில் அனில் அம்பானி மற்றும் 2 இயக்குநர்களும் குற்றவாளி என உச்சநீதிமன்றம் தீர்பளித்தது. மேலும் எரிக்சன் நிறுவனத்திற்கு ரூ.453 கோடி தொகையை செலுத்தாவிட்டால் 3 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என எச்சரித்தனர். அத்துடன் நீதிமன்ற அவமதிப்பிற்காக 3 குற்றவாளிகளுக்கும் 1 கோடி ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.