மனிதர்கள் முக்கியம் என்றாலும், மனிதர்களைப் போல பசுக்களும் முக்கியம் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியிருக்கும் கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், பசுக்காவலர்கள் எனக் கூறிக் கொள்ளும் கும்பல், பசுமாடுகளை கொண்டு செல்வோரை குறிவைத்து தாக்குதல் நடத்துவது வழக்கமாக இருக்கிறது. பசு மாடுகளை இறைச்சிக்கு பயன்படுத்தக் கூடாது எனக் கூறி இந்த கும்பல் தாக்கியதில், பசு மாடுகளை வீட்டில் வளர்ப்பதற்காக கொண்டு சென்றோரும் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.
 
பசு பாதுகாவலர்கள் என்ற கும்பலின் அட்டூழியத்தை அடக்க மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகள் எடுத்தாலும், அவர்களின் கொட்டத்தை அடக்க முடியாத நிலையில், ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் பசுவை கொண்டு சென்ற ஒருவர், வன்முறைக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்டார். இந்த விவகாரம் நாடு முழுவதும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதுடன், நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத் தொடரிலும் எதிரொலித்தது.
 
இந்நிலையில், மனிதர்களுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்றும், அதே நேரத்தில் பசுக்களுக்கும் மனிதர்களுக்கு முக்கியத்துவம் தர வேண்டும் என உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார். ஒவ்வொரு தனிநபரும், ஒவ்வொரு மதத்தினரும், ஒவ்வொரு சமூகத்தினரும் மற்றவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் எனத் தெரிவித்தார். அதேநேரத்தில் நாமும் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியது அவசியம் என்றும் யோகி ஆதித்யநாத் கூறினார்.
 தற்போது நடைபெறும் தாக்குதல் சம்பவங்கள் குறித்து பேசும் காங்கிரஸ் கட்சி, 1984ல் சீக்கியர்களுக்கு எதிரான வன்முறை குறித்து பேசுமா என்றும் அவர் கேள்வி எழுப்பினார். பசு பாதுகாப்பு கும்பலால் நடத்தப்படும் வன்முறைக்கு காங்கிரஸ் கட்சி தேவையில்லாமல் முக்கியத்துவம் கொடுப்பதாகவும் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டினார். நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடியின் பாணியை காப்பியடித்து, ராகுல் காந்தி கட்டியணைத்தது குழந்தை தனமானது என விமர்சித்த யோகி ஆதித்யநாத், அவரது நடவடிக்கை மூலம் அவருக்கு மனமுதிர்ச்சி இல்லை என்பது தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.