தொழிலதிபர் சேகர் ரெட்டியிடம் இருந்து ரூ.127 கோடி ரொக்கம், 150 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக வருமான வரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த விசாரணை அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2 நாட்களாக தொழிலதிபர் சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம் மற்றும் நிறுவனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் மேலும் ரூ.500 கோடி வங்கி முதலீடு செய்யப்பட்டதற்கான ஆவணங்களும், ரூ.100 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளுக்கான ஆவணங்களையும் வருமான வரித் துறையினர் கண்டுபிடித்துள்ளனர்.
இதனையடுத்து, சேகர் ரெட்டியிடம் நேற்று முன்தினம் தொடங்கிய விசாரணை, நேற்றும் தொடர்ந்து நடைபெற்றது. தமிழகத்தில் மணல் விற்பனையில் ஈடுபட்டு வரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த பிரபல கனிமவள தனியார் நிறுவனம் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு வருவதாகவும், அந்த நிறுவனத்தினர் பல கோடி ரூபாய்களை பதுக்கி வைத்திருப்பதாகவும், வருமான வரித்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
இதனை தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளரான சேகர் ரெட்டியின் வீட்டில் சோதனை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, சென்னையில் தியாகராய நகர் யோகாம்பாள் சாலையில் சேகர் ரெட்டியின் வீடு உள்ளது. நேற்று முன்தினம் அங்கு வருமான வரித் துறை அதிகாரிகள் ஒரு குழுவாகச் சென்று சோதனை நடத்தினர்.
அவரது சகோதரரான சீனிவாச ரெட்டியின் வீடு விஜயராகவா சாலையில் உள்ளது. நண்பர் பிரேமின் வீடு முகப்பேரில் உள்ளது. இந்த 2 இடங்களிலும் சோதனை நடத்தப்பட்டது.
இதேபோல், சென்னை ராஜா அண்ணாமலைபுரத்தில் உள்ள ஆந்திரா கிளப், தி.நகரில் உள்ள சேகர் ரெட்டியின் நிறுவனம், வேலூர் மாவட்டம் காட்பாடி காந்தி நகரில் உள்ள சேகர் ரெட்டியின் வீடு உள்ளிட்ட 8 இடங்களில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட சோதனையில் 160 பேர் ஈடுபட்டனர். இவர்கள் 8 குழுக்களாக தனித்தனியாக பிரிந்து சோதனை மேற்கொண்டனர்.
மணல் குவாரிகளை முறைகேடாக சேகர் ரெட்டி பயன்படுத்தியகா கூறப்படுகிறது. இதுதொடர்பாக, தமிழக அரசின் உயர் பதவிகளில் இருக்கும் அதிகாரிகள் சிலர் துணையாக இருந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 6 மாதங்களாகவே, சேகர் ரெட்டி குறித்து வருமான வரித் துறையினருக்கு பல்வேறு புகார்கள் வந்தன. இதனை தொடர்ந்து, சேகர் ரெட்டி யார், யாரிடம் செல்போனில் அதிகமாக பேசுகிறார் என்பது பற்றி வருமான வரித்துறையினர் ரகசியமாக ஆய்வு செய்தனர்.
சேகர் ரெட்டியின் செல்போன் பேச்சுகள் ஒட்டு கேட்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அப்போது பல ஆதாரங்கள் சிக்கின. இதன் அடிப்படையிலேயே சேகர்ரெட்டியின் வீடுகள், நிறுவனங்களில் சோதனை நடத்தப்பட்டுள்ளது. இதற்கு உடந்தையாக அதிகாரிகள் சிலர் செயல்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
வருமான வரித்துறை விசாரணையில் அது உண்மை என்பது தெரியவந்தால் அதிகாரிகள் பலர் சிக்குவதற்கும் வாய்ப்புகள் உள்ளது என வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதை தொடர்ந்து, விசாரணை நடைபெற்று வருவதால் சோதனை முடிவில்தான் மொத்தம் எவ்வளவு பணம், தங்கம், கணக்கில் வராத சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது என விவரம் தெரியவரும் என்று வருமான வரித்துறையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், சேகர் ரெட்டியின் வீடு, அலுவலகம் மற்றும் தொழிற்நிறுனங்களில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.127 கோடி ரொக்கம், 150 கிலோ தங்கம், ரூ.100 கோடி மதிப்பிலான அசையும், அசையா சொத்துகளுக்கான ஆவணங்களை வருமான வரித் துறையினர் பறிமுதல் செய்து தொடர்ந்து சோதனைகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் சேகர் ரெட்டியிடம் பிறமுதல் செய்யப்பட்டுள்ள ரொக்கம், தங்கம், கணக்கில் வராத சொத்துக்கள், அசையும், அசையா சொத்துகளுக்கான விசாரணையை அமலாக்கத்துறைக்கு மாற்றப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
