ஆந்திராவில் எலெக்ட்ரிக் பைக்கை சார்ஜ் செய்யும் போது, வெடித்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
ஆந்திராவில் எலெக்ட்ரிக் பைக்கை சார்ஜ் செய்யும் போது, வெடித்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். விஜயவாடாவில் உள்ள குலோபிப்பேட்டையில் சிவக்குமார் என்பவர் நேற்றிரவு தனது படுக்கையறையில் வாகனத்தின் பேட்டரிக்கு மின் இணைப்பு கொடுத்துவிட்டு தூங்கியுள்ளார். அப்போது அதிகாலை 3 மணி அளவில் எலெக்ட்ரிக் பைக்கின் பேட்டரி திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்து, தீ விபத்து ஏற்பட்டது.

இதில் படுகாயமடைந்த சிவக்குமார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் இந்த விபத்தில் காயமடைந்த அவரது மனைவி, இரண்டு குழந்தைகள் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். முன்னதாக கடந்த 19 ஆம் தேதி தெலுங்கான மாநிலத்தில் வீட்டிற்குள் சார்ஜில் வைக்கபட்டிருந்த பேட்டரி திடீரென வெடித்து தீப்பிடித்ததில், 80 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கடந்த மாதம் இது போன்று தமிழகத்தில் வேலூர் அருகே எலக்ட்ரிக் பைக்கின் பேட்டரி வெடித்து விபத்தில் சம்பவ இடத்திலே தந்தை, மகள் உயிரிழந்தனர். இரவில் எலக்ட்ரிக் பேட்டரி பைக்கிற்கு சார்ஜ் போட்டுவிட்டு தூங்கிய நிலையில், திடீரென எலக்ட்ரிக் பைக்கில் பொறுத்தப்பட்டிருந்த பேட்டரி வெடித்து சிதறியது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில் இருவரும் உயிரிழந்தனர்.

திருவள்ளூர் அருகே வீட்டின் முன்பு நிறுத்தி வைத்திருந்த பேட்டரி பைக் தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானது. இரவு வழக்கம்போல் தனது பைக்கை வீட்டின் முன்பு நிறுத்தி சார்ஜ் செய்த நிலையில், காலை திடீரென்று பேட்டரி வெடித்து சிதறியது. இந்த விபத்தில், வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டி, மோட்டார் பம்புகள் என சுமார் 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் தீக்கிரையாயின.

புனேவில் ஓலா நிறுவனத்தின் எலெக்ட்ரிக் பைக் திடீரென தீ பிடித்தது. சாலையில் நின்று கொண்டு இருந்த பைக் திடீரென தீ பிடித்து எரிந்தது. அதிர்ஷ்டவசமாக அந்த பைக்கில் அப்போது யாரும் இல்லை. பார்க் செய்யப்பட்டு இருந்த பைக் திடீரென வெயிலில் பற்றி எரிந்தது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
