தேர்தல் பத்திரங்கள்.. மிகப்பெரிய அளவில் நன்கொடை கொடுத்தவர்கள் யார்? அதன் பயனாளிகள் யார்? வெளியான பட்டியல்!
Electoral Bonds : ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (எஸ்பிஐ), உச்ச நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அளித்த தகவலின்படி, தேர்தல் பத்திரங்களின் முழு பட்டியலையும் இந்திய தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்துள்ளதாக கூறியுள்ளது.
இதனையடுத்து வெளியிடப்பட்ட தரவுகளின்படி, தேர்தல் பத்திரங்கள் மூலம் பெறப்பட்ட மொத்தத் தொகை ரூ.12,145.87 கோடி. இந்த தொகையில், முதல் 10 நன்கொடையாளர்கள், அதாவது 33 சதவீதம் அல்லது ரூ.4,548.30 கோடி குறித்த தகவல்கள் பின்வருமாறு அளிக்கப்பட்டுள்ளது.
அதிக அளவில் நன்கொடை வழங்கியவர்கள் யார் யார்?
எஸ்பிஐ அளித்த தரவுகளின்படி, லாட்டரி மன்னன் செபாஸ்டியன் மார்ட்டினின் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் இந்த திட்டத்திற்கு அதிக நன்கொடை அளித்து, ரூ.1,365 கோடி மதிப்பிலான பத்திரங்களை வாங்கியுள்ளது. இரண்டாம் இடத்தில் உள்ள மேகா இன்ஜினியரிங் & இன்ஃப்ராஸ்ட்ரக்சர்ஸ் ரூ.966 கோடி நன்கொடை அளித்துள்ளது, ரிலையன்ஸ்-இணைக்கப்பட்ட க்விக் சப்ளை செயின் ரூ.410 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது.
Pushpak : இந்தியாவின் முதல் மறுபயன்பாட்டு ஏவுகணை'புஷ்பக்' : இன்று வெற்றிகரமாக சோதனை செய்த இஸ்ரோ..
வேதாந்தா லிமிடெட் ரூ. 400 கோடி மதிப்புள்ள பத்திரங்களை வாங்கியுள்ளது, ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமத்தின் முதன்மை அனல் ஆலை நிறுவனமான ஹால்டியா எனர்ஜி லிமிடெட் ரூ.377 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது. மேலும் சுரங்க நிறுவனமான எஸ்செல் மைனிங் ரூ.224.5 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளது.
அதே சமயம் வெஸ்டர்ன் யுபி பவர் டிரான்ஸ்மிஷன் கம்பெனி ரூ.220 கோடி மதிப்பிலான பத்திரங்களை பணமாக்கியது. தொலைத்தொடர்பு நிறுவனமான பார்தி ஏர்டெல் ரூ.198 கோடி மதிப்பிலான பத்திரங்களுடன் இந்த பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. கொல்கத்தாவைச் சேர்ந்த எஃப்எம்சிஜி குழுமமான கெவென்டர்ஸ் ஃபுட்பார்க் லிமிடெட் மற்றும் எஃகு பொருட்கள் உற்பத்தியாளர்களான எம்கேஜே எண்டர்பிரைசஸ் முறையே ரூ.195 மற்றும் ரூ.192.4 கோடி மதிப்புள்ள தேர்தல் பத்திரங்களை வாங்கியுள்ளன.
சரி எந்தெந்த அரசியல் கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக பணம் பெற்றுள்ளன?
கடந்த நான்காண்டுகளில் சுமார் 6,000 கோடி ரூபாய்க்கு மேல் நன்கொடைகளைப் பெற்று, தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் மூலம் பாரதிய ஜனதா கட்சி (BJP) தான் மிகப்பெரிய பயனாளியாக இருந்துள்ளது. ஹைதராபாத்தை தளமாகக் கொண்ட உள்கட்டமைப்பு நிறுவனமான மேகா இன்ஜினியரிங் (எம்இஐஎல்) பிஜேபிக்கு மிகப்பெரிய அளவில் நன்கொடை அளித்துள்ளது. அதாவது ரூ 519 கோடி மதிப்புள்ள பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
பட்டியலிடப்படாத தனியார் நிறுவனமான குவிக் சப்ளை ரூ.375 கோடியும், வேதாந்தா ரூ.226.7 கோடியும், பார்தி ஏர்டெல் ரூ.183 கோடியும் நன்கொடையாக அளித்துள்ளன. மதன்லால் லிமிடெட் (ரூ. 175.5 கோடி), கெவென்டர்ஸ் ஃபுட்பார்க் இன்ஃப்ரா (ரூ. 144.5 கோடி), டிஎல்எஃப் கமர்ஷியல் டெவலப்பர்ஸ் (ரூ. 130 கோடி) போன்ற நிறுவனங்களிடமிருந்தும் பாஜக கணிசமான நன்கொடைகளைப் பெற்றுள்ளது. தொழிலதிபர் லக்ஷ்மி மிட்டல் பாஜகவுக்கு தனிப்பட்ட முறையில் ரூ.35 கோடி நன்கொடை அளித்துள்ளார், மேலும் பலர் ஆளும் கட்சிக்கு ரூ.10-25 கோடி வரை நன்கொடை அளித்துள்ளனர்.
மேலும் அனைத்திந்திய திரிணாமுல் காங்கிரஸ் (TMC), இந்தத் திட்டத்தின் இரண்டாவது பெரிய பயனாளியாகும். மேற்கு வங்காளத்தில் ஆளும் கட்சியாக உள்ள TMC, லாட்டரி கேமிங் நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸ் நிறுவனத்திடமிருந்து மிகப்பெரிய நன்கொடையைப் பெற்றுள்ளது. அவர்கள் ரூ.542 கோடி மதிப்புள்ள கட்சியின் பத்திரங்களை வாங்கியுள்ளனர். மம்தா பானர்ஜி தலைமையிலான கட்சிக்கு மற்ற முக்கிய நன்கொடையாளர்களில் ஹல்டியா எனர்ஜி (ரூ. 281 கோடி), தரிவால் இன்ஃப்ரா (ரூ. 90 கோடி), மற்றும் எம்கேஜே எண்டர்பிரைசஸ் (ரூ. 45.9 கோடி) ஆகியோர் ஆவர்.
இதற்கிடையில், தேர்தல் பத்திரங்கள் திட்டத்தின் பலன்களின் அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்தது. 125 கோடி மதிப்பிலான பத்திரங்கள் மூலம் நன்கொடைகள் அளித்ததன் மூலம் காங்கிரஸ் கட்சியின் நிதிக்கு வேதாந்தா மிகப்பெரிய பங்களிப்பாளராக இருந்துள்ளது. வேதாந்தா குழுமத்தைத் தொடர்ந்து வெஸ்டர்ன் யுபி டிரான்ஸ்மிஷன் கோ ரூ. 110 கோடியும், எம்கேஜே எண்டர்பிரைசஸ் (ரூ. 91.6 கோடி), யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல் (ரூ. 64 கோடி), ஏவீஸ் டிரேடிங் அண்ட் ஃபைனான்ஸ் லிமிடெட் (ரூ. 53 கோடி) நன்கொடைகளை அளித்துள்ளன. மேலும் 50 கோடி மதிப்பிலான நன்கொடைகள் கொடுத்து ஃபியூச்சர் கேமிங்கும் காங்கிரஸுக்கு குறிப்பிடத்தக்க அளவில் நன்கொடை கொடுத்துள்ளது.
தெலுங்கானாவைச் சேர்ந்த பாரத் ராஷ்டிர சமிதிக்கு (BRS) மேகா இன்ஜினியரிங் (எம்இஐஎல்) 195 கோடி ரூபாய் மதிப்பிலான நன்கொடைகளை அளித்துள்ளது. காங்கிரஸின் குறிப்பிடத்தக்க பங்களிப்பாளரான யசோதா சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும், BRSக்கு பெரிய தொகையை நன்கொடையாக அளித்துள்ளது. மேலும் BRSக்கு மற்ற குறிப்பிடத்தக்க அளவில் நன்கொடை கொடுத்தவர்கள், சென்னை கிரீன் வூட்ஸ் பிரைவேட் லிமிடெட் (ரூ. 50 கோடி), டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் (ரூ. 32 கோடி), மற்றும் ஹெட்டெரோ டிரக்ஸ் லிமிடெட் (ரூ. 30 கோடி) ஆகியவை ஆகும்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, 503 கோடி ரூபாய் நன்கொடையுடன், லாட்டரி நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளது. மேகா இன்ஜினியரிங் நிறுவனம் ரூ. 85 கோடி நன்கொடை அளித்த நிலையில், வெஸ்ட்வெல் கேஸ் (ரூ. 8 கோடி), அஸ்கஸ் லாஜிஸ்டிக்ஸ் (ரூ. 7 கோடி), மற்றும் ஃபெர்டில்லேண்ட் ஃபுட்ஸ் (ரூ. 5 கோடி) ஆகியவை குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்துள்ளன.
கட்சிகளுக்கு நிறுவனங்கள் எவ்வளவு நன்கொடை அளித்தன?
முன்னணி நன்கொடை நிறுவனமான ஃபியூச்சர் கேமிங் மற்றும் ஹோட்டல் சர்வீசஸின் மிகப்பெரிய நன்கொடையாக டிஎம்சிக்கு ரூ. 542 கோடி அளித்துள்ளது. அதைத் தொடர்ந்து ரூ.503 கோடி திமுகவுக்கு, ரூ.154 கோடி ஆந்திராவைச் சேர்ந்த ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்கு மற்றும் ரூ. 100 கோடி பா.ஜ.க, இறுதியாக 50 கோடி மதிப்புள்ள நன்கொடை காங்கிரஸ் கட்சிக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேகா இன்ஜினியரிங் அண்ட் இன்ஃப்ராஸ்ட்ரக்சர் லிமிடெட்டின் மிகப்பெரிய பங்களிப்பானது பிஜேபிக்கு, 584 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் பணமாக்கப்பட்டது. மேலும் பிஆர்எஸ்க்கு (ரூ. 195 கோடி), திமுகவிற்கு (ரூ. 85 கோடி), ஒய்எஸ்ஆர்சிபிக்கு (ரூ. 37 கோடி), மற்றும் தெலுங்கு தேசம் கட்சிக்கு (ரூ. 28 கோடி) நன்கொடை அளித்துள்ளது.
Qwik சப்ளை செயின் நிறுவனம் பாஜகவுக்கு ரூ.375 கோடி நன்கொடையாக வழங்கியுள்ளது. அதன் மற்ற இரண்டு தேர்தல் பத்திரங்களில் சிவசேனாவிற்கு (ரூ. 25 கோடி) மற்றும் தேசியவாத காங்கிரஸ் (என்.சி.பி) மகாராஷ்டிராவிற்கு (ரூ. 10 கோடி) வழங்கியுள்ளது. வேதாந்தா லிமிடெட், 230.2 கோடி ரூபாய் மதிப்பிலான பத்திரங்கள் மூலம் பாஜகவுக்கு பெருமளவில் நன்கொடை அளித்துள்ளது.
இந்நிறுவனம் காங்கிரஸுக்கு ரூ.125 கோடியும், பிஜு ஜனதா தளத்துக்கு (பிஜேடி) ரூ.40 கோடியும் நன்கொடையாக வழங்கியது. இதற்கிடையில், ஹால்டியா எனர்ஜி லிமிடெட் நன்கொடைகளின் குறுகிய அளவை கொண்டிருந்தது, முக்கியமாக டிஎம்சிக்கு (ரூ 281 கோடி), அதைத் தொடர்ந்து பாஜகவிற்கு (ரூ 81 கோடி), மற்றும் காங்கிரஸ்க்கு (ரூ 15 கோடி) வழங்கியுள்ளது.
தேர்தல் பத்திர வழக்கில் சீரியல் நம்பருடன் முழு விவரங்களை வெளியிட்டது தேர்தல் ஆணையம்!