election expenses in uttar pradesh

உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக பெரிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியவை ஏறக்குறைய ரூ. 5,500 கோடி வரை செலவு செய்துள்ளன எனத் தெரியவந்துள்ளது.

வாக்காளர்களுக்கு ஒட்டுப்போட மட்டும் ரூ. ஆயிரம் கோடி செலவு செய்யப்பட்டுள்ளது, மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் பணத்துக்காக அல்லது மதுவுக்காக மட்டுமே தங்கள் வாக்கை விற்பனை செய்துள்ளனர் என ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வு

சி.எம்.எஸ். எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் உத்தரப்பிரதேச தேர்தல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியது. இதில் வாக்காளர்களுக்கு கொடுக்கப்பட்ட பணம், அன்பளிப்பு, கட்சிகளின் பிரசாரச் செலவு, பிரசார வியூகம் உள்ளிட்டவை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதில் உத்தரப்பிரதேச சட்டப்பேரவைத் தேர்தலில் பெரிய கட்சிகளான பாரதிய ஜனதா, காங்கிரஸ்,சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் ஆகியவை ஒட்டுமொத்தமாக ஏறக்குறைய ரூ. 5 ஆயிரத்து 500 கோடி பிரசாரத்துக்காக செலவு செய்துள்ளன.

ரூ.25 லட்சம்

வேட்பாளர் ஒருவர் தேர்தலுக்கு தனது தொகுதியில் அதிகபட்சமாக ரூ. 25 லட்சம் வரை செலவு செய்ய தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. ஆனால், உத்தரப்பிரதேசத்தில் பெரும்பாலான வேட்பாளர்கள், தேர்தல் ஆணையம் வரையரை செய்துள்ள, அனுமதிக்கும் செலவுத் தொகையைக் காட்டிலும், அதிகமாகவே செலவு செய்துள்ளனர்.

 ரூ.900கோடி

தேர்தல் பிரசாரங்களும் வழக்கமான பானியில் மட்டுமல்லாமல் புதிய வித்தியாசமான முறையிலும் செய்யப்பட்டுள்ளது. பதாகைகள், சுவரொட்டிகள் போன்ற அச்சுத் தொழில் நுட்ப பிரசாரம், மின்னணு முறையில் பிரசாரம், பெரிய திரைகளில் திட்டங்களை விளக்கி கூறும் பிரசாரம், வீடியோ வாகனங்கள் போன்றவை மூலம் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ரூ. 600 கோடி முதல் ரூ.900 கோடி வரை செலவு செய்யப்பட்டுள்ளது.

உத்தரப்பிரதேசத்தில் சராசரியாக ஒரு வாக்களர் வாக்களிக்க ரூ. 750 செலவு செய்யப்பட்டுள்ளது. தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்தபோது, உத்தரப்பிரதேசத்தில் ரூ. 200 கோடியும், பஞ்சாபில்ரூ. 100 கோடியும் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டுள்ளது.

ரூ. ஆயிரம் கோடி

வாக்களர்களுக்கு மட்டும் தேர்தலில் போது வாக்களிக்க ரூ.ஆயிரம் கோடி வரை செலவு செய்யப்பட்டு இருக்கலாம் எனத் தெரியவந்துள்ளது. ரூபாய் நோட்டு தடையால் தேர்தல் செலவு எந்பது கனிசமாக அதிகரித்துள்ளது.

ரூ.500 முதல் ரூ.2000

சில தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு என்பது கடும் போட்டியாக இருந்ததால், அந்த தொகுதிகளில் உள்ள வாக்களுக்கு ஒருவருக்கு ரூ. 500 முதல் ரூ. 2000 வரை பணம் கொடுக்கப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் எப்போதும் இல்லாத வகையில் அதிகமாக செலவு செய்தார்கள் என மூன்றில் இரு பங்கு வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசார முறைகள்

உத்தரப்பிரதேசத்தில் இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் வீட்டுக்கு வீடு பிரசாரம், பேரணிகள், யாத்திரைகள், சமூக ஊடகங்கள், டி.வி. விளம்பரம், நாளேடுகளில் விளம்பரம், பெரிய திரைகள்மூலம் பிரசாரம், மோட்டார் சைக்கிள் பேரணி, நடிகர், நடிகைகள் மூலம் பிரசாரம் செய்யப்பட்டுள்ளது.