ஒரு மாநிலத்தின் சட்டசபை கலைக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தும், இந்த விதிமுறைகள் தேர்தல் நடந்து, புதிய அரசு பதவி ஏற்கும்வரை நடைமுறையில் இருக்கும் என்று மத்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக அறிவித்துள்ளது. இதற்கு முன் தேர்தல் நடத்தை விதிமுறைகள் என்பது தேர்தல் தேதி அறிவி்க்கப்பட்ட உடனேயே நடைமுறைக்கு வந்தது. அதை மாற்றி இ்ப்போது சட்டசபை கலைக்கப்பட்ட உடனே விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன.

தெலங்கானா மாநிலத்தின் சட்டசபைக் காலம் அடுத்த ஆண்டு வரை இருக்கும் நிலையில், முன்கூட்டியே தேர்தலைச் சந்திக்கும் வகையில் சட்டப்பேரவையை கலைப்பதாகக் கடந்த மாதம் முதல்வர்அறிவித்தார். தேர்தல் ஆணையத்தின் இந்த விளக்கத்தைத் தொடர்ந்து அங்குத் தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்துள்ளன. 

கடந்த 1994-ம் ஆண்டு மத்திய அரசுக்கு எதிராக எஸ்.ஆர் பொம்மை உள்ளிட்டவர்கள் தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின் அடிப்படையில் சில அறிவிப்புகளைத் தேர்தல் ஆணையம் பிறப்பித்துள்ளது. இதன்படி, தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தபின், காபந்து அரசும், முதல்வரும் அன்றாட அரசுப்பணிகள் நடக்க உதவத்தான் முடியுமேத் தவிர எந்தவிதமான கொள்கை முடிவுகளும், திட்டங்களும், புதிய நடவடிக்கைகளும் எடுக்க முடியாது. 

தேர்தல் நடத்தை விதிமுறை விதிகள் பிரிவு-4ன் படி, ஆட்சியில் இருக்கும் கட்சி அதாவது, காபந்து அரசு அது மாநிலம் அல்லது மத்திய அரசாக இருந்தாலும் இந்த விதிமுறை பொருந்தும். அதுமட்டுமல்லாமல், அரசு வாகனங்கள், கருவிகள், அரசின் பணம், வளங்கள், அதிகாரிகள், அரசு ரீதியான பயணம் உள்ளிட்டவற்றை அரசு சாராத பணிகளுக்குப் பயன்படுத்தக்கூடாது. குறிப்பாக அரசு முறைப் பயணம் என்று கூறிக்கொண்டு தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்கக் கூடாது. இந்த விதிமுறை மாநிலத்தில் காபந்து முதல்வராக இருப்பவருக்கும் பொருந்தும், மத்தியில் காபந்து பிரதமராக இருப்பவருக்கும் பொருந்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.