Asianet News TamilAsianet News Tamil

ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு ஆப்பு… 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது…

Election commission
election commission-S82RC8
Author
First Published May 1, 2017, 6:20 AM IST


ஓட்டுக்கு பணம் கொடுக்கும் வேட்பாளருக்கு ஆப்பு… 5 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிட முடியாது…

வாக்குக்குப் பணம் கொடுக்க முயலும் வேட்பாளர்கள், ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்கும் வகையில் உரிய சட்டத்திருத்தத்தை கொண்டுவருமாறு மத்திய அரசுக்குதேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

சென்னை ஆர்.கே.நகர் சட்டப் பேரவைத் தொகுதியில் கடந்த மாதம் 12-ஆம் தேதி இடைத்  தேர்தல் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் தேர்தல் ஆணையத்தின் கடுமையான கண்காணிப்பையும் மீறி, பல்வேறு நூதன வழிகளைப் பயன்படுத்தி வாக்காளர்களுக்கு சில வேட்பாளர்கள் பணம் கொடுத்ததாக எழுந்த புகார்களை அடுத்து தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்நிலையில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுத்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும் வேட்பாளர்கள், அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குத் தேர்தலில் போட்டியிடத் தடை விதிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது.

இதையடுத்து  மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ளுமாறு மத்திய அரசுக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரைத்துள்ளது.

மேலும் வாக்காளர்களைக் கவர கட்சிகள் பணம் கொடுத்தால் அந்தத் தேர்தலை நேரடியாக ரத்து செய்யும் அதிகாரத்தை வழங்குமாறு மத்திய அரசிடம் தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய நிலையில், தேர்தலின்போது கட்சிகள் வன்முறையில் ஈடுபட்டால் மட்டுமே தேர்தல் ஆணையத்தால் அந்தத் தேர்தலை நேரடியாக ரத்து செய்ய முடியும். வாக்காளர்களுக்கு வேட்பாளர்கள் பணம் அளிப்பது தெரிய வந்தால், அரசியல் சாசனத்தின் 324-ஆவது பிரிவைப் பயன்படுத்தி மட்டுமே அந்தத் தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ய முடியும்.

அரசியல் சாசனப் பிரிவை அடிக்கடி பயன்படுத்த விரும்பாததால்தான், வாக்குக்குப் பணம் கொடுத்தால் தேர்தலை ரத்து செய்யும் நேரடி அதிகாரத்தை தேர்தல் ஆணையம் கோரியுள்ளது.

 

Follow Us:
Download App:
  • android
  • ios