2019 ஆம் ஆண்டு நடைபெறும் மக்களவைத் தேர்தலில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு முறை பயன்படுத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

உத்தரப்பிரதேசம்,உத்தரகாண்ட், மணிப்பூர்,பஞ்சாப் மற்றும் கோவா ஆகிய 5 மாநிலங்களுக்கான சட்டமன்றத் தேர்தல்கள் அண்மையில் நடத்தப்பட்டது.

இதில் உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் பெரும்பான்மை பலத்துடன் பா.ஜ.க.ஆட்சி அமைத்துள்ளது. கோவாவில் சுயேட்சை மற்றும் இதற கட்சிகளின் ஆதரவுடன் பா.ஜ.க. ஆட்சி அமைத்தது. 

ஆனால் பா.ஜ.க.வெற்றி பெற்ற மாநிலங்களில் பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு நடைபெற்றிருப்பதாக எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன. இவ்விவகாரத்தில் பகுஜன் சமாஜ்  கட்சித் தலைவர் மாயாவதி,  ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், ஆகியோர் மத்திய அரசு மீது வெளிப்படையாகவே குற்றஞ்சாட்டி இருந்தனர். வாக்குப்பதிவு இயந்திரங்களில் எந்த பொத்தானை அழுத்தினாலும் அவை பா.ஜ.க.வுக்கே வாக்காக மாறுவதாகவும் புகார் அளிக்கப்பட்டது. 

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மீது மக்கள் நம்பிக்கை இழந்துவிட்டதாகவும், எனவே எதிர்வரும் தேர்தல்களில் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிய உதவும் ஒப்புகைச் சீட்டு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஒப்புகைச்சீட்டு நடைமுறை முழுமையாக பயன்படுத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக 3 ஆயிரம் கோடி ரூபாயை கூடுதலாக செலவழிக்கப்படும் என்றும் தேர்தல் தெரிவித்துள்ளது.