பொதுத் தேர்தலின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டால், அந்த நாளில் இருந்தது  அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டுவர வேண்டும் என மத்திய சட்ட அமைச்சகத்துக்கு தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் மூலமே  மக்கள் பிரதிநிதிகள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிறது இந்திய அரசியலமைப்புச் சட்டம்.

இந்த தேர்தலில் வெற்றி பெறுவதற்காக வாக்காளர்களை கவர்ந்து வாக்குகளை பெறுவதற்காக அரசியல் கட்சிகள் பல்வேறு செயல்திட்டங்களை தேர்தல் வாக்குறுதிகளாக அளித்து வருகிறது. குறிப்பாக ஏராளமான இலவச திட்டங்களை அளித்து வருகிறது.

அதேநேரத்தில்  ஓட்டுக்கு பணம் கொடுக்கும் கலாச்சாரமும் அதிகரித்து விட்டது. இதனை தடுப்பதற்கான சட்ட விதிமுறைகளை கடுமையாக்கவேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம், மத்திய சட்ட அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில்  வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பவர்கள் மீது குற்றச்சாட்டு பதிவு செய்த நாளில் இருந்து அடுத்த 6 ஆண்டுகளுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்யப்பட வேண்டும் என பரிந்துரை செய்துள்ளது.

அண்மையில்  தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுப்பதாக புகார் வருவதால், சட்ட அமைச்சகத்திற்கு தேர்தல் ஆணையம் இந்த பரிந்துரையை முன்வைத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஓட்டுக்கு பணம் கொடுத்ததாக தொடரப்படும் வழக்கில் குற்றவாளி என நீதிமன்றத்தில் தீர்ப்பு வந்தால் மட்டுமே தேர்தலில் போட்டியிட 6 ஆண்டு தடை விதிக்கலாம் என்ற சட்டம் அட்டுமே தற்போது நடைமுறையில் உள்ளது.