தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா அறிவித்துள்ளார். இதனையடுத்து இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை ஒலிப்பெருக்கி வைக்கக்கூடாது உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம் 90 கோடி வாக்காளர்கள் இந்த முறை வாக்களிக்க தகுதியானவர்கள். வாக்காளர் பட்டியல் சரியாக இருக்க வேண்டியது அவசியம். அதற்கான நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார். இந்ததேர்தலில் மொத்தம் 8.4 கோடி புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் என தகவல் தெரிவித்துள்ளார். 

அனைத்து வாக்குச்சாவடிகளிலும் யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறியும் இயந்திரம் இருக்கும். மேலும் இலவச டோல்பிரீ எண் 1950 மூலம் புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சரிபார்க்கலாம்.  புகைப்படத்துடன் கூடிய வாக்குச் சாவடி சீட்டு தேர்தலுக்கு 5 நாள் முன்பே வழங்கப்படும். ஆனால் உரிய அடையாள அட்டை கொண்டே வாக்களிக்க வேண்டும் என தெரிவித்தார். 

யாருக்கு வாக்களித்தோம் என்பதை அறிந்து கொள்ள உதவும் ஒப்புகைச் சீட்டு இயந்திரம் அனைத்து இடங்களிலும் இருக்கும். ஏறக்குறைய 10 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது. வேட்பாளர்கள் படிவம் 26 தாக்கல் செய்யாவிட்டால் வேட்புமனு நிராகரிக்கப்படும். தேர்தலை அமைதியாக நடத்த மத்திய ரிசர்வ் பாதுகாப்புப்படையினர் அதிக அளவில் குவிக்கப்பட இருக்கின்றனர். நாடாளுமன்றத் தேர்தலில் 17.4 லட்சம் ஒப்புகைச்சீட்டு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 

இந்த தேர்தலில் ஏதேனும் புகார் தெரிவிக்க வேண்டும் என்றால் ஆண்ட்ராய்டு ஆப்-மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். தகவல் தெரிவிப்போரது அடையாளம் பாதுகாக்கப்படும். மேலும் நடவடிக்கைகள் செய்தியாக வெளியிடப்படும் என்றார். சமூக வலைதளங்களில் வெளியிடுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகளுக்கு உட்பட்டது. கருத்து கணிப்பை வெளியிடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது என இந்திய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தகவல் தெரிவித்துள்ளார்.