சமூக நல்லிணக்கம்: பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து!
பக்ரீத் பண்டிகை சமூக நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும் என பிரதமர் மோடி பக்ரீத் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இஸ்லாமியர்களின் முக்கிய புனித பண்டிகைகளில் ஒன்றான ஈகை திருநாளாம் பக்ரீத் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இப்ராகிம் நபி, இஸ்மாயில் நபி ஆகியோரின் தியாகத்தை போற்றும் வகையில் தியாகத்திருநாளாக பக்ரீத் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவ வேண்டும். அண்டை வீட்டாருடன் நல்லுறவை பாராட்ட வேண்டும் என்பதை பக்ரீத் திருநாள் வலியுறுத்துகிறது.
தமிழகம் உட்பட நாடு முழுவதும் உள்ள மசூதிகளில் அதிகாலையில் சிறப்பு தொழுகைகளில் இஸ்லாமிய மக்கள் ஈடுபட்டனர். பள்ளிவாசல்களில் ஏராளமான இஸ்லாமியர்கள் புத்தாடை உடுத்தி சிறப்பு தொழுகையில் ஈடுபட்டு ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்.
பக்ரீத் பண்டிகையையொட்டி பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில், “இந்த நாள் அனைவருக்கும் மகிழ்ச்சியையும் செழிப்பையும் தரட்டும். இது நமது சமூகத்தில் ஒற்றுமை மற்றும் நல்லிணக்க உணர்வை நிலைநிறுத்தட்டும்.” என பிரதமர் மோடி பக்ரீத் திருநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இந்த மங்களகரமான தருணம் அனைவருக்கும் அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியைத் தரட்டும் என வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், “ஈத் பண்டிகையையொட்டி, அனைத்து மக்களுக்கும், குறிப்பாக இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வசிக்கும் நமது இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு எனது இதயம் கனிந்த வாழ்த்துக்களையும், நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஈத் பண்டிகை அன்பையும், தியாகத்தையும் விளக்கும் புனித பண்டிகையாகும். தியாகம் மற்றும் மனித குலத்துக்கு தன்னலமற்ற சேவையை வழங்கும் பாதையை பின்பற்ற இந்தப் பண்டிகை நம்மை ஊக்குவிக்கிறது. இந்த நாளில், சமுதாயத்தில் பரஸ்பர சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தை பரப்ப நாம் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தி அன்பு நெறி காட்டிய நபிகள் நாயகத்தின் வழி நடக்கும் இசுலாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது பக்ரீத் பெருநாள் வாழ்த்துகள். ஏழை - எளியோரின் பசி தீர்த்துக் கொண்டாடும் தியாகத்தின் திருநாள் இது. இந்நாளில், "ஈட்டிய பொருளில் முதலில் ஏழைகள்; பிறகு நண்பர்கள்; அடுத்துதான் தங்களுக்கு” என்ற உயரிய கோட்பாட்டின் அடிப்படையில் அனைவருக்கும் பகிர்ந்தளித்து, பயன்படுத்திக் கொள்ளும் பண்பையும், மனித நேயத்தையும் இசுலாமியப் பெருமக்கள் வெளிப்படுத்துகிறார்கள். இத்தகைய உயரிய நெறியினைக் கடைப்பிடித்து வரும் இசுலாமிய சமூகத்தினர் அனைவரும் பக்ரீத் திருநாளைக் கொண்டாடி அன்பைப் பரிமாறிக் கொள்ளவும், நபிகளார் காட்டிய வழியில் அனைவரிடத்தில் அன்பு செலுத்திக் கருணை காட்டிடவும் என் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.