டிஜிட்டல் கல்விச் சான்றிதழ் சேமிப்பகத்தை உருவாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை கூட்டத்தில், ஜம்மு காஷ்மீரில் தோட்டக்கலைத் துறையை மேம்படுத்த ரூ. 500 கோடி ஒதுக்க முடிவு செய்தது. மத்திய அரசு ஊழியர்களின் அகவிலைப்படியை 2% உயர்த்தவும், ஓய்வூதியதாரர்களுக்கான கருணைத் தொகையை அதிகரிக்கவும் அமைச்சரவை தீர்மானித்தது.

டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக நாடு‌ தழுவிய கல்விச் சான்றிதழ் சேமிப்பகத்தை உருவாக்கவும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது. அதன்படி, இன்னும் 3 மாதங்களில் டிஜிட்டல் கல்விச் சான்றிதழ் சேமிப்பகம் உருவாக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த திட்டம் வரும் 2017-18ம் கல்வியாண்டில் நாடு முழுவதும் செயல்பாட்டிற்கு வரும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக் கழகங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மாணவர்களுக்கான இணையவழி பயன்பாட்டுத் தளமாக டிஜிட்டல் கல்விச் சான்றிதழ் சேமிப்பகம் திகழும். ஆன்லைன்‌ மூல‌மாகவே கல்விச் சான்றிதழ்களை மாணவர்கள் பெற முடியும். வேலை, கடன் உள்ளிட்ட பல்வேறு செயல்முறைகளிலும் சான்றிதழ்களை ஆன்லைன் மூலமே சரிபார்த்துக் கொள்ள முடியும். ஆதார் எண் மூலம் ஒவ்வொருவரின் கல்விச் சான்றிதழ்களும் தனித்தனியாக வேறுபடுத்தப்படுகின்றன.