முஸ்லிம் பெண்கள் உயர் கல்வி படிப்பதையும், பட்டப்படிப்பு படிப்பதை ஊக்கப்படுத்தவும், பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்களுக்கு திருமண உதவித் தொகையாக ரூ.51 ஆயிரம் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் அறிவிக்க உள்ளது. 

ஷாதி ஷகுன் என்ற பெயரில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மவுலானாஆசாத் கல்வி அறக்கட்டளை மூலம் ஏற்கனவே உதவித் தொகை பெற்று படித்த முஸ்லிம் பெண்களுக்கு மட்டுமே இந் திட்டம் பொருந்தும், 

தேசிய சிறுபான்மை ஆணையத்தின் கீழ் மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. முஸ்லிம் பெண்கள் உயர் கல்வி கற்பதறை ஊக்கப்படுத்தும் வகையில் இந்த ஊக்கத்தொகை திட்டம் தொடங்கப்பட உள்ளது. இந்த திட்டம் முழுக்க முழுக்க முஸ்லிம் பட்டதாரி பெண்களுக்கு மட்டுமே பொருந்தும். கல்லூரியில் பட்டப்படிப்போ அல்லது பல்கலையில் முதுகலை பட்டப்படிப்போ முடித்த முஸ்லிம் பெண்கள் இந்த உதவித் தொகை பெற தகுதியானவர்கள். 

சமீபத்தில் மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி,மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகளுடன் நடத்திய ஆலோசனையில், முஸ்லிம் பட்டதாரி பெண்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் குறித்து முடிவு செய்யப்பட்டது. 

இதன்படி, 9-ம், 10வகுப்பும் படிக்கும் முஸ்லிம சிறுமிகளுக்கு ரூ.10 ஆயிரம், 11 மற்றும் 12ம் வகுப்பு படிக்கும் முஸ்லிம் மாணவிகளுக்கு ரூ.12 ஆயிரம் கல்வி உதவித் தொகை வழங்கவும் முடிவு செய்யப்பட்டது. 

மவுலானா ஆசாத் கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் சாஹிர் உசைன் கூறுகையில், “ முஸ்லிம்சமூகத்தில் உள்ள பெரும்பாலான பெண் குழந்தைகளுக்கு உயர் கல்வி மறுக்கப்பட்டு வருகிறது. இதற்கு காரணம் நிதிச்சிக்கலும், பணப்பிரச்சினையுமே காரணம். ஆதலால், முஸ்லிம் பெண் குழந்தைகள் உயர் கல்வி கற்க ஊக்கப்படுத்தவும், கல்வியை முழுமையாக முடிக்கவும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, பட்டப்படிப்பு முடித்த முஸ்லிம் பெண்கள் திருமண உதவித் தொகையாக ரூ.51 ஆயிரம் அளிக்கப்படும். இதன் மூலம் பெண்களின் உயர் கல்வி கற்கும் வாய்ப்பு அதிகரிக்கும்.