தேசிய கீதத்தில் உள்ள சிந்து என்ற வார்த்தையைத் திருத்தம் செய்ய வேண்டும் என்று, மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. ரிபின் போரா தனிநபர் தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்.

சிந்த் என்ற வார்த்தை நாட்டின் எந்த பகுதியையும் குறிப்பிடவில்லை என்ற அவர், சிந்த் என்ற வார்த்தையை வடகிழக்கு இந்தியாவை குறிக்கும் உத்தர்புர்வ் என்று திருத்தம் செய்ய வேண்டும் என்றும் தீர்மானத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்

எம்.பி. ரிபின் போரா கொண்டு வந்த தீர்மானத்தில், இந்தியாவில் முக்கியம் வாய்ந்த பகுதியாகக் கருதப்படும், வடகிழக்கு மாகாணத்தைக் குறிக்கும் எந்தச் சொல்லும் தேசிய கீதத்தில் இடம்பெறவில்லை. அதனால், சிந்து என்ற வார்த்தையை திருத்தி வடகிழக்கு இந்தியா என்று திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

ஜன கண மன என்ற சொற்கள் மற்றும் இசை, இந்தியாவின் தேசிய கீதம் உள்ளடக்கிய அமைப்பாகும். இவ்வகை சொற்களை மாற்றி அமைப்பதற்கு சந்தர்ப்பம் எழும்பட்சத்தில், அரசாங்க அங்கீகாரத்துடன் மாற்றி அமைக்கலாம் என்று 1950 ஆம் ஆண்டு குடியரசு தலைவராக இருந்த டாக்டர் ராஜேந்திர பிரசாத், அரசியலமைப்பு சபையில் வெளியிட்ட அறிக்கையை மேற்கொள்  காட்டினார் எம்.பி. ரிபின் போரா.