இனி யார் முதல்வர் வேட்பாளர் என்கிற கேள்வியை யாரும் கேட்க வேண்டாம். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு நிச்சயமாக வரும். இன்னும் தேர்தலுக்கு காலம் இருக்கிறது.

அதிமுக பாஜக இடையே கூட்டணி அமைந்தாலும், கடந்த சில மாதங்களாக முதல்வர் வேட்பாளர் யார்? யார் தலைமையில் கூட்டணி என பல கேள்விகள் எழுந்தன. எடப்பாடி பழனிசாமி அதிமுக தலைமையில் தான் கூட்டணி, நான் தான் முதல்வர் வேட்பாளர் என கூறி வந்தார். பாஜக தலைவர்களோ தேசிய ஜனநாயக கூட்டணி தலைமையில் தான் கூட்டணி என்று பேசி வந்தனர். இதனால் யார் தலைமையில் கூட்டணி என்ற குழப்பத்திற்கு பாஜக மூலமே விடை கிடைத்துள்ளது.

அமித்ஷா தேசிய ஜனநாயக் கூட்டணி ஆட்சி தான் என்று பேசியதாகவும், இந்த விவகாரத்தில் அமித்ஷா சொன்னதைத்தான் நானும் சொல்கிறேன்.. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி தான் அமையும் என்று அண்ணாமலை பேசியது கூடுதல் சலசலப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், அமித்ஷா முன்பே அண்ணாமலை, எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்க வேண்டும் என பேசி இந்த விவாதங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். நெல்லையில் நடைபெற்ற பாஜக பூத் கமிட்டி மாநாட்டில் பேசிய தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை எடப்பாடி பழனிசாமியை முதல்வராக்குவது தேசிய ஜனநாயக கூட்டணி தொண்டர்களின் கடமை என்றார்.

இந்நிலையில் இன்று திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், ‘‘ எடப்பாடி பழனிசாமிதான் தமிழகத்தில் தேசிய ஜனநாயக் கூட்டணியின் தலைலவர்.எடப்பாடி பழனிசாமிதான் தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளர். தேர்தல் முடிந்த பிறகு அவர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதுதான். இந்த விசயத்தில் யாரும் மன வருத்தத்தில் இல்லை. இது குறித்து கேள்வி கேட்பவர்கள் மன வருத்தல் இல்லாமல் இருந்தால் சரி. பிரதமர் இனி அடிக்கடி தமிழகம் வருவார். ரொம்ப குழம்ப வேண்டாம். முதலில் திமுக ஆட்சி இருக்கக்கூடாது. திமுகவில் பி டீமாக நிறையப்பேர் இருக்கிறார்கள். இந்த ஆட்சி இருக்கக்கூடாது என்கிற நிலையில் இருக்கிறோம்.

இனி யார் முதல்வர் வேட்பாளர் என்கிற கேள்வியை யாரும் கேட்க வேண்டாம். முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான். திமுகவில் உள்ள கூட்டணி கட்சிகள் எங்கள் கூட்டணிக்கு நிச்சயமாக வரும். இன்னும் தேர்தலுக்கு காலம் இருக்கிறது. தமிழகத்தில் பலமான கூட்டணிதான் ஜெயிக்கும் என்கிற கட்டாயம் கிடையாது. அதற்கு பல்வேறு உதாரணங்கள் இருக்கிறது. 1991-ல் என்ன நடந்தது? 2006ல் என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும். 2006ல் எல்லா சாதி கட்சிகளையும் இணைத்து கூட்டணி வைத்து திமுக பலமாக இருந்தது. ஆனால் வெற்றிபெறவில்லை. அப்போது ஜெயலலிதாதானே வெற்றிபெற்றார். ஆகையால் 2026ல் நிச்சயமாக ஆட்சி மாற்றம் வரும். திமுக வீட்டுக்கு அனுப்பபடும்’’ எனத் தெரிவித்தார்.