திருப்பதி சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அங்கு வந்திருந்த துணை குடியரசுத் தலைவர் வெங்கய்ய நாயுடுவை சந்தித்து சுமார் 20 நிமிடங்கள் வரை மனம் விட்டு பேசியுள்ளார். மத்திய அரசு சி.பி.ஐ மூலமாக கொடுக்கும் குடைசல், தி.மு.க தொடரும் ஊழல் வழக்குகள் போன்றவற்றால் மிகுந்த டென்சனில் இருந்த எடப்பாடி பழனிசாமிக்கு திடீரென வெங்கய்ய நாயுடு அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்துள்ளது. துணைக் குடியரசுத் தலைவர் உங்களை பார்க்க விரும்புவதாகவும், திருப்பதியில் 25ந் தேதி சந்திப்பு என்று கடந்த 23ந் தேதி தான் எடப்பாடி பழனிசாமிக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அதற்கான ஏற்பாடுகள் செய்யப்ட்டன. 

செம டென்சனில் இருந்த எடப்பாடி பழனிசாமி 24ந் தேதியே திருப்பதி சென்றுவிட்டார். 25ந் தேதி காலையில் தரிசனத்திற்கு செல்வதற்கு முன்னதாகவே வெங்கய்ய நாயுடுவை சந்திக்க புறப்பட்டுச் சென்றுவிட்டார் எடப்பாடி பழனிசாமி. இருவருமே அருகருகே உள்ள அறைகளில் தான் தங்கியிருந்தனர். எடப்பாடி வருகைக்காக வெங்கய்ய நாயுடு காத்திருந்தார். இருவரும் இருக்கும் இடத்தில் எடப்பாடியின் செயலாளருக்கு மட்டுமே அனுமதி. அதுவும் மொழிபெயர்ப்புக்கு மட்டுமே. சுமார் 20 நிமிடங்கள் இருவரும் மிகத் தீவிரமாக தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசியுள்ளனர். 

அப்போது மத்திய அரசுடன் தாங்கள் எவ்வளவு இணக்கமாக இருந்தாலும் ஏதேனும் ஒரு பிரச்சனையை  கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள் என்று எடப்பாடி பழனிசாமி வெங்கய்யாவிடம் கூறியதாகவும், அதற்கு அரசியல் ஈசியானது இல்லை, நாம் ஒரு பக்கம் சென்றால் அரசியல் வேறொரு பக்கம் இழுக்கும் என்கிற ரீதியில் வெங்கய்யா பதில் அளித்தாகவும் சொல்லப்படுகிறது. நீங்கள் தெரிந்தோ தெரியாமலேயே பா.ஜ.கவிற்கு சாதகமான சில முடிவுகளை எடுத்து எங்களுக்கு தோழனாக இருந்துள்ளீர்கள், எனவே நாங்கள் கைவிடமாட்டோம் என்று வெங்கய்ய நாயுடு கூறியதாகவும் கூறப்படுகிறது.

 

மேலும், எதையும் சீரியசாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எல்லாம் நன்மைக்கு தான் என்றும் எடப்பாடிக்கு வெங்கய்ய அறிவுரை சொன்னதாகவும் சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து வெங்கய்ய நாயுடு ஆந்திராவின் பேமசான பூத்தரேக்குலு எனும் ஸ்வீட்டை எடப்பாடிக்கு கொடுத்துள்ளார். தனது வீட்டில் செய்யப்பட்ட ஸ்வீட் என்றும், தான் எங்கு சென்றாலும் இதை கையோடு கொண்டு செல்வதாகவும் கூறி எடப்பாடியை சாப்பிட்டுப் பார்க்க சொல்லியுள்ளார் வெங்கய்ய நாயுடு.  

இந்த சந்திப்பின் போது வழக்கமான பேச்சுக்கு இடையே எடப்பாடிக்கு வெங்கய்ய நாயுடு கொடுத்த ஸ்வீட்டை விடமேலும் ஒரு மகிழ்ச்சியான செய்தி சொல்லப்பட்டுள்ளதாகவும் அந்த உற்சாகத்தில் தான் சேலம் திரும்பிய வேகத்தில் தி.மு.கவை கிழித்து தொங்கவிட்டுள்ளார் எடப்பாடி என்கின்றனர் அவருக்கு நெருக்கமானவர்கள்.