தடை செய்யப்பட்ட பி.எஃப்.ஐ. பணமோசடி வழக்கில் எஸ்.டி.பி.ஐ. தேசியத் தலைவர் மொய்தீன் ஃபைஸி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். டெல்லியை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் எஸ்.டி.பி.ஐ., பி.எஃப்.ஐ.யின் அரசியல் பிரிவு எனக் கூறப்படுகிறது. ஃபைஸி விசாரணைக்கு ஒத்துழைக்காததால் கைது செய்யப்பட்டார்.
தடைசெய்யப்பட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (PFI) மீதான பணமோசடி வழக்கு விசாரணை தொடர்பாக, எஸ்.டி.பி.ஐ. (SDPI) கட்சியின் தேசியத் தலைவர் மொய்தீன் ஃபைஸியை அமலாக்கத்துறை கைது செய்துள்ளது.
2009ஆம் ஆண்டு நிறுவப்பட்ட SDPI கட்சி டெல்லியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இக்கட்சி செப்டம்பர் 2022 இல் மத்திய அரசால் தடை செய்யப்பட்ட PFI உடன் தொடர்புடைய அரசியல் கட்சி எனக் கூறப்படுகிறது.
"மொய்தீன் குட்டி கே என்கிற எம்.கே. ஃபைஸி மார்ச் 3ஆம் தேதி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார். எஸ்டிபிஐ பிஎஃப்ஐயின் அரசியல் முன்னணியாகும். மேலும் ஃபைஸி 2018 முதல் எஸ்டிபிஐயின் தேசியத் தலைவராக உள்ளார். அவர் பாட்டியாலா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு ஆறு நாட்கள் காவலில் வைக்கப்படுகிறார்" என்று அமலாக்கத்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்திருக்கிறார்.
வருமான வரித்துறை சோஷியல் மீடியா கணக்கையும் ஆய்வு செய்யலாம்! புதிய விதியில் பிரைவசி மீறலா?
அமலாக்கத்துறை ஃபைஸியின் வாக்குமூலத்தைப் பதிவு செய்ததுடன், விமான நிலையத்தில் அவரிடமிருந்து ஒரு மொபைல் போனையும் பறிமுதல் செய்தது.
"ஃபைஸிக்கு அமலாக்கத்துறை பலமுறை சம்மன் அனுப்பியது. 12 வாய்ப்புகள் வழங்கப்பட்டும், அவர் ஆஜராகாமல் விசாரணையைத் தவிர்த்து வந்தார். மார்ச் 28, 2024 அன்று, ஃபைஸி ஆஜராகாததற்காக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக அமலாக்கத்துறை புகார் அளித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி பிறப்பிக்கப்பட்ட உத்தரவின்படி, அவருக்கு எதிராக வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அமலாக்கத்துறையின் விசாரணைக்கு ஒத்துழைக்காமல் இருந்ததால், ஜனவரி 17ஆம் தேதி அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. அவர் இருக்கும் இடத்தைக் கண்டறிவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டபோதும், அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை," என்று அமலாக்கத்துறை செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.
2013ஆம் ஆண்டு தேசிய புலனாய்வு முகமையால் பதிவு செய்யப்பட்ட FIRகளின் அடிப்படையில், பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் PFI மற்றும் பிறருக்கு எதிராக விசாரணைகள் நடத்தப்பட்டதாக அமலாக்கதுதறை தெரிவித்துள்ளது. “இந்தியா முழுவதும் பயங்கரவாதச் செயல்களைச் செய்வதற்காக நிதியளிக்க PFI இன் நிர்வாகிகள், உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் இந்தியாவிற்குள்ளும் வெளிநாட்டிலிருந்தும் வங்கிகள், ஹவாலா, நன்கொடைகள் போன்றவற்றின் மூலம் நிதி சேகரித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது” என்றும் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் இதுவரை ரூ.61.72 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. இதுவரை, இந்த வழக்கு தொடர்பாக ஒன்பது புகார்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே இந்த வழக்கில் 26 பிஎஃப்ஐ உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில் டிரேட் மார்க் பதிவு செய்வது எப்படி? விதிமுறைகள் என்னென்ன?
அமலாக்கத்துறை வெளியிட்டுள்ள அறிக்கை:
