வாக்குப்பதிவு எந்திரத்தில் தில்லுமுல்லு ஏதும் செய்ய முடியாது என்று தேர்தல் ஆணையம் உறுதியுடன் சவால் விடுத்துள்ளது. அதை நிரூபித்துக் காட்டுவதற்காக, ஜூன் 3-ந்தேதி முதல் அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.

வாக்குப்பதிவு எந்திரத்தின் மூலமாக வாக்குச் செலுத்தும் முறை நாட்டில் கடந்த 1999-ம் ஆண்டு முதல் நடைமுறையில் இருந்து வருகிறது. கடந்த 18 ஆண்டுகளாக இதனை பயன்படுத்தி வந்தபோது அரசியல் கட்சிகளுக்கு மத்தியில் சந்தேகம் ஏதும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் பஞ்சாப், கோவா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட், மணிப்பூர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபை தேர்தல் நடைபெற்றது.

இதில் குறிப்பாக உத்தப்பிரதேசத்தில் மொத்தம் உள்ள 403 தொகுதிகளில் பாஜக 312 இடங்களை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது. இதையடுத்து உத்தரப்பிரதேச தேர்தல் வெற்றி தொடர்பாக அரசியல் கட்சிகள் சந்தேகம் எழுப்பின.

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்து பாஜக வெற்றி பெற்றதாக அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டின. அவற்றில் குறிப்பாக ஆம் ஆத்மி கட்சியானது, தங்களுக்கு வாய்ப்பு அளித்தால் வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்பதை நிரூபித்துக் காட்டுவோம் என்று தேர்தல் ஆணையத்துக்கு சவால் விடுத்தது.

மேலும், டெல்லி மாநகராட்சி தேர்தலில் தோல்வி அடைந்ததற்கு, வாக்குப்பதிவு எந்திரத்தில் பாஜக முறைகேடு செய்ததே காரணம் என்று ஆம் ஆத்மி குற்றம்சாட்டியது. இதேபோன்று பகுஜன் சமாஜ் கட்சியும், வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டியது.

இந்த விவகாரங்களால் வாக்குப்பதிவு எந்திரத்தின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்து விட்டதாக ஊடகங்கள் கருத்து தெரிவித்திருந்தன. இதற்கிடையே வாக்காளர்கள் வாக்களித்தால் அதனை உறுதி செய்யும் வகையில் வாக்கு ஒப்புகை சீட்டு வழங்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

வரும் மக்களவை தேர்தலில் இதனை பயன்படுத்துவதற்காக ரூ. 3,174 கோடியை வழங்க வேண்டும் என்று நிதி அமைச்சகத்திடம் தேர்தல் ஆணையம் கோரியது. இதற்கு நிதி அமைச்சகமும் ஒப்புதல் அளித்தது.

இந்நிலையில், வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டு விவகாரம் மீண்டும் எழுந்ததை தொடர்ந்து கடந்த 12-ந்தேதி தேர்தல் ஆணையமும், அரசியல் கட்சிகளும் ஆலோசனை நடத்தின. இதில், 7 தேசிய கட்சிகள் மற்றும் 35 மாநில கட்சிகள் என மொத்தம் 42 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டு வாக்குப்பதிவு எந்திர முறைகேட்டு விவகாரம் குறித்து தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து, முறைகேட்டை நிரூபிக்க அரசியல் கட்சிகளுக்கு வாய்ப்பு அளிப்பதற்கு தேர்தல் ஆணையம் முடிவு செய்தது. இருப்பினும், அதற்கான தேதி முடிவு செய்யப்படாமல் இருந்தது.

இந்த நிலையில், நேற்று முன்தினமும், நேற்றும் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு ஏதும் செய்ய முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்தது. இதுகுறித்து தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, செய்தியாளர்களுக்கு நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சில அரசியல் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. ஆனால் அவற்றுக்கான ஆதாரம் எதையும் அக்கட்சிகள் கொண்டு வரவில்லை.

சவாலுக்கு தயாரா?

தேர்தல் ஆணையத்தின் வாக்குப்பதிவு எந்திரங்கள் தொழில் நுட்ப ரீதியாக வலுவாக உள்ளன. அதில் எந்தவித முறைகேடும் செய்யவே முடியாது. இதில் சில அரசியல் கட்சிகள் சந்தேகம் கொண்டுள்ளன. இதனைத் தீர்க்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.

வாக்குப்பதிவு எந்திரத்தில் முறைகேடு செய்ய முடியும் என்று கூறும் கட்சிகள் ஜூன் 3-ந்தேதி முதல் அதனை நிரூபணம் செய்யலாம். அதற்கான ஏற்பாடுகளை நாங்கள் செய்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

வயர்லெஸ் மூலமாக வாக்குப்பதிவு எந்திரம் இணைக்கப்படும்போது அதில் முறைகேடு செய்யலாம் என்று அரசியல் கட்சிகள் கூறியிருந்தன.

இதற்கு பதில் அளித்த தலைமை தேர்தல் ஆணையர் ஜைதி, ‘‘எந்திரங்கள் தனித்தன்மை கொண்டவை. அவற்றை எதனுடனும் இணைக்க முடியாது. முறைகேடு செய்ய ஒருவர் முயற்சி செய்யும்போது, வாக்குப் பதிவு எந்திரம் தன்னிச்சையாக செயல் இழந்து விடும். இதேபோன்று வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு அரசியல் கட்சிகள் முன்னிலையில் பலத்த பாதுகாப்பை அளித்தோம். எனவே முறைகேட்டுக்கு வாய்ப்பே இல்லை’’ என்றார்.

தேர்தல் ஆணையத்தில் இந்த சவாலை ஏற்கும் கட்சிகள் வரும் 26-ந்தேதி தங்களது பெயரை பதிவு செய்து கொள்ள முடியும். சவாலுக்கு ஒரு அரசியல் கட்சியில் இருந்து 3 பிரதிநிதிகள் வரை பங்கேற்க முடியும். அவர்களிடம் 5 மாநில சட்டசபை தேர்தலில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு எந்திரங்கள் வழங்கப்படும். அரசியல் கட்சி பிரதிநிதிகள், வாக்குப்பதிவு எந்திரத்தில் உள்ள கருவிகளை மாற்றம் செய்யாமல், அதில் முறைகேடு செய்ய வேண்டும். ஏதாவது ஒரு பட்டனை அமுக்கப்படும்போது முறைகேட்டை அரசியல் கட்சிகள் அம்பலப்படுத்த வேண்டும்.