வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் பெயர்களை அளிக்க ராகுல் காந்திக்கு தேர்தல் ஆணையம் கடிதம் எழுதியுள்ளது. உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டு, பெயர்களை சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
கர்நாடக மாநிலத் தேர்தலில் வாக்குத் திருட்டு (vote chori) நடந்ததாகக் குற்றம்சாட்டியுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அதற்கான ஆதாரங்களை அளிக்குமாறுக்கு கர்நாடகா தேர்தல் ஆணையம் (Karnataka Election Commission) அவருக்கு கடிதம் எழுதியுள்ளது. கையெழுத்திட்டு உறுதியளித்தால், தேவையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது.
தேர்தல் ஆணையத்தின் கோரிக்கை
தேர்தல் முறைகேடுகள் குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகிறார். இந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக, முறையான உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டு, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக அவர் கூறும் வாக்காளர்களின் பெயர்களை இன்று மாலைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று கர்நாடக தலைமைத் தேர்தல் அதிகாரி (CEO) ராகுல் காந்தியிடம் கோரியுள்ளார்.
தேர்தல் ஆணையம் ராகுல் காந்திக்கு அனுப்பிய கடிதத்தில், “வாக்காளர் பட்டியல்கள் வெளிப்படையான முறையில் தயாரிக்கப்பட்டுள்ளன. தேர்தல் முடிவுகளை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் மனுக்கள் மூலம் மட்டுமே கேள்வி கேட்க முடியும். எனவே, வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டதாக நீங்கள் கூறும் வாக்காளர்களின் பெயர்களை, '1960 வாக்காளர் பதிவு விதிகள் பிரிவு 20(3)(b)'ன் கீழ் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவத்தில் கையெழுத்திட்டுத் தர வேண்டும். இதன் மூலம், தேவையான நடவடிக்கைகளைத் தொடங்க முடியும்” என்று கூறியுள்ளது.
பொய் சாட்சியம் அளித்தால் தண்டனை
இந்தக் கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள உறுதிமொழிப் படிவத்தில், "தவறான சாட்சியம் அளிப்பது 'பி.என்.எஸ். சட்டம் 227'ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம்" என்றும், "வாக்காளர் பட்டியல் தொடர்பாக தவறான பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்வது 'மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1950ன் பிரிவு 31'ன் கீழ் தண்டனைக்குரிய குற்றம்" என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ராகுல் காந்தியின் பதில்
தேர்தல் ஆணையத்தின் கோரிக்கைக்குப் பதிலளித்த ராகுல் காந்தி, "இது அவர்களது தரவு, நாங்கள் அதை மட்டுமே காட்டுகிறோம். இது எனது தரவு அல்ல, தேர்தல் ஆணையத்தின் தரவு. நாங்கள் சொல்வது தவறு என்று அவர்களால் மறுக்க முடியவில்லை. ஏனென்றால், உண்மை அவர்களுக்குத் தெரியும்" என்று கூறினார். மேலும், "நான் மக்களிடம் கூறுவது ஒரு சத்தியப்பிரமாணம் போன்றது. இது நாட்டின் பல பகுதிகளில் நடந்துள்ளது" என்றும் அவர் கூறினார்.
மகாராஷ்டிரா, ஹரியானா மற்றும் மத்தியப் பிரதேசத்தில் நடந்த தேர்தல்களில் முறைகேடுகள் நடந்ததாக ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி வெற்றிபெற்றது, வாக்காளர் முறைகேடுகள் குறித்த நமது நீண்டகால சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அவர் கூறினார். கர்நாடகாவில் எம்.பி.க்கள் தேர்தல் குறித்த மனுக்களை இப்போது தாக்கல் செய்ய முடியாது என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
