Katchatheevu இந்திய மீனவர்கள் 6,184 பேரை கைது செய்த இலங்கை: வெளியுறவுத்துறை அமைச்சர்!
இந்திய மீனவர்கள் 6,184 பேரை இதுவரை இலங்கை அரசு கைது செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்
தமிழகத்தில் கச்சத்தீவு விவகாரம் பூதாகரமாகியுள்ளது. மக்களவைத் தேர்தலையொட்டி, இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ள பாஜக, கடந்த இரண்டு நாட்களாக 1974 ஆம் ஆண்டில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக திமுக, காங்கிரஸ் ஆகிய கட்சிகளை விமர்சித்து குற்றச்சாட்டுக்களை அடுக்கி வருகிறது.
அதன் ஒருபகுதியாக பாஜக மாநிலங்களவை எம்.பி.யும், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சருமான ஜெய்சங்கர் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “கச்சத்தீவு விவகாரம் பற்றி உங்களுக்கு முழுமையாக தெரியாமல் இருக்கலாம். இந்த பிரச்சினை ஏன் எழுந்தது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன்.” என்றார். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே 1974ல் ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்த கடல் எல்லை ஒப்பந்தத்தில் இலங்கைக்கு கச்சத்தீவு தாரைவார்க்கப்பட்டது என ஜெய்சங்கர் கூறினார்.
என்ன காந்தி இறந்து விட்டாரா? கச்சத்தீவு விவகாரத்தில் பிரதமர் மோடியை வறுத்தெடுத்த சீமான்!
இதுதான் பிரச்சினையின் பின்னணி என்ற அவர், கச்சத்தீவு விவகாரம் திடீரென எழவில்லை. நாடாளுமன்றத்தில் அடிக்கடி விவாதம் நடத்தப்படும். நாடாளுமன்றத்தில் கச்சத்தீவு விவகாரம், மீனவர் பிரச்னை தொடர்பாக 5 ஆண்டுகளாக பல்வேறு கட்சிகளால் குரல் எழுப்பப்பட்டு வந்தது என்றார். நாடாளுமன்றக் கேள்விகள், விவாதங்கள் மற்றும் ஆலோசனைக் குழுவில் கச்சத்தீவு விவகாரம்தான் முக்கியமாக இருந்ததாக வெளியுறவுத்துறை அமைச்சர் கூறினார்.
இது குறித்து தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி தனக்கு பலமுறை கடிதம் எழுதியுள்ளதாக தெரிவித்த வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர், இதே பிரச்சினை தொடர்பாக தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினும் எனக்கு கடிதம் எழுதி வருகிறார். இந்த விவகாரம் தொடர்பாக 21 முறை ஸ்டாலினுக்கு பதில் அளித்துள்ளேன் என்றார்.
தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் கேடுகெட்டவர்கள் என்று குற்றம் சாட்டிய ஜெய்சங்கர், “காங்கிரஸ் மற்றும் திமுக ஆகிய இரு கட்சிகளும் தங்களுக்கு எந்தப் பொறுப்பும் இல்லை என்பது போல் இந்த விவகாரத்தை அணுகியுள்ளன.” என்றார்.
இலங்கை கடல் பகுதியில் மீன்பிடிப்பதை 1974 ஒப்பந்தம் தடை செய்கிறது என்ற அவர், இந்திய மீனவர்கள் உரிமை குறித்து நாடாளுமன்றத்தில் 1974இல் விளக்கம் தரப்பட்டுள்ளது. கச்சத்தீவு விவகாரம் மீனவர்களின் நலன்களுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 20 ஆண்டுகளில் இந்திய மீனவர்கள் 6,184 பேரை இதுவரை இலங்கை அரசு கைது செய்துள்ளதாகவும், 1175 படகுகள் சிறை பிடிக்கப்பட்டுள்ளதாகவும் வேதனை தெரிவித்தார்.
கச்சத்தீவு பிரச்சினையை தீர்க்க வேண்டிய சூழ்நிலையில் மத்திய அரசு உள்ளது. இதற்கு எந்த வரலாறும் இல்லை, இது அப்படியே நடந்து விட்டது. பிரச்சினை கையில் எடுப்பவர்கள்தான் அதற்கு காரணம். அதை யார் செய்தார்கள் என்பது மட்டுமல்ல, அதை யார் மறைத்தார்கள் என்பதும் நமக்கு இப்போது தெரியும் எனவும் ஜெய்சங்கர் தெரிவித்தார்.