Due to heavy rains in Bangalore this morning the death toll in many places has caused a shock.
பெங்களூரில் இன்று மாலை பெய்த பலத்த மழை காரணமாக, பல்வேறு இடங்களில் 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இதனால், சேஷாத்திரிபுரம் ரயில் பாலம் கீழ், ஐந்தடி வரை தண்ணீர் தேங்கி நின்றதால், வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்தன.
மேலும் ராஜாஜிநகர், மடிவாளா, சாந்திநகர், கோரமங்களா, சிவாஜிநகர், ஹெப்பால், எலஹங்கா, இந்திராநகர் என பல பகுதிகளில் சாலைகளில் தண்ணீர் தேங்கியதோடு, கால்வாய்கள் நிரம்பி சாலைகளில் வெள்ளம், பெருக்கெடுத்து ஓடியது.
இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியது. சில இடங்களில் பேருந்து போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டது.
சேஷாத்திரிபுரத்தில் பல வாகனங்கள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இன்று மாலையில் கன மழை வெளுத்து வாங்கியதில் எச்.பி.கே. லே - அவுட் குருபரஹள்ளி வார்டு, வெங்கடரமணா சாமி கோவில் அருகிலுள்ள மழைநீர் கால்வாயில், இரண்டு பேர் அடித்து சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
தகவலறிந்த பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளும், தீயணைப்பு துறை மற்றும் பேரிடர் மீட்பு குழுவின் அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.
தண்ணீரில் அடித்து செல்லப்பட்டவர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.குருபரஹள்ளி 18 வது கிராசில், தாழ்வான பகுதியிலுள்ள வீடு ஒன்றில், மழை வெள்ளம் புகுந்தது.
வீட்டுக்குள் இருந்த சங்கரப்பா, கமலம்மா ஆகியோர், தப்பிப்பதற்காக, காம்பவுண்ட் சுவர் ஏற முயன்றுள்ளனர். அப்போது, தவறி, விழுந்து, இருவரும், தண்ணீர் மூழ்கி பலியாகினர்.
இதுபோல் பெங்களூரில் கனமழைக்கு இதுவரை 9 பேர் பலியாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் உயிரிழப்பு கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
