ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரில், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள 23 டன் Mandrax மாத்திரைகளை, வருவாய்த்துறை புலனாய்வு இயக்கக அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர். இது தொடர்பாக, மருந்து தொழிற்சாலை உரிமையாளரையும் கைது செய்துள்ளனர்.

இந்தியாவில், தடைசெய்யப்பட்ட போதை மருந்து மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படுவது தொடர்பாக கிடைத்த தகவலின்பேரில், ராஜஸ்தான் மாநில வருவாய்த்துறை புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் உதய்பூர் பகுதியில் Kaladwas என்ற இடத்தில், மருந்து கம்பெனி ஒன்றில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, போதை மருந்து மாத்திரைகள் உற்பத்தி செய்யப்படுவதை உறுதி செய்த அதிகாரிகள், அந்த தொழிற்சாலையின் உரிமையாளரான Ravi Dhudhwani-யை கைது செய்தனர். அவர் அளித்த தகவலின்பேரில், அந்த நிறுவனத்திற்குச் சொந்தமான கிடங்கிலிருந்து, 23 புள்ளி 5 டன் Mandrax மாத்திரைகளை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். 

இந்தியாவில் ஒரு மாத்திரை, சில ரூபாய்கள் செலவில் உற்பத்தி செய்யப்பட்டு, சர்வதேச சந்தையில், ஒரு மாத்திரை 150 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

இந்த மாத்திரைகளை, சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள மருந்து தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டு மொசாம்பிக், தென்னாப்பிரிக்க நாடுகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது என மத்திய கலால் மற்றும் சுங்கத்துறை வாரிய தலைவர் திரு. நஜீப் ஷா தெரிவித்துள்ளார். இந்தியாவில், 5 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான போதை மருந்துகள் உற்பத்தி செய்யப்படுவது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது இதுவே முதல்முறை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.