அபராதம் செலுத்தாவிட்டால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து; அரசு அதிரடி; வாகன ஓட்டிகளே உஷார்!
போக்குவரத்து விதிகளை மீறுபவர்கள் அபராதம் செலுத்தாவிட்டால் அவர்களின் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்து ஆணையரகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
அதிகரிக்கும் சாலை விபத்துகள்
இந்தியாவில் மக்கள் தொகை பெருக்கத்துக்கு நிகராக வாகனங்களும் அதிகமாக உள்ளன. இதனால் முக்கிய நகரங்களில் போக்குவரத்து நெரிசல் ஒருபக்கம் தலைவலியாக இருக்கும் நிலையில், மறுபக்கம் சாலை விபத்துகளும் ஆண்டுதோறும் அதிகரித்து வருகின்றன. வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மீறுவதே 90% சாலை விபத்துகளுக்கு காரணமாக விளங்கி வருகிறது.
போக்குவரத்து விதிகளை மீறும் வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. ஆனால் சில வாகன ஓட்டிகள் அபாரத தொகை செலுத்துவது இல்லை. ஒருசிலர் எத்தனை அபாரதம் போட்டாலும் அதனை கட்டுவதில்லை. இதற்கு முடிவுகட்டும் வகையில் இனிமேல் அபராதம் செலுத்தாவிட்டால் டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என்று பஞ்சாப் மாநிலத்தின் சண்டிகர் போக்குவரத்து ஆணையரகம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
டிரைவிங் லைசென்ஸ் ரத்து செய்யப்படும்
இது தொடர்பாக போக்குவரத்துத் துறையின் பதிவு மற்றும் உரிம ஆணையத்தின் பொறுப்பாளர் பிரத்யுமான் சிங் கூறுகையில், ''போக்குவரத்து மீறல்கள் சாலை விபத்துகளுக்கு மிகப்பெரிய காரணம். கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளில் சண்டிகரில் போக்குவரத்து மீறல்களுக்கு அபராத பணம் செலுத்தாதது வெகுவாக அதிகரித்துள்ளது. 7.5 லட்சத்திற்கும் அதிகமான அபராதங்கள் கட்டப்படவில்லை. இது மிகவும் கவலைக்குரியது. இனிமேல் அபராதம் செலுத்தாதவர்களின் டிரைவிங் லைசென்ஸ்சை ரத்து செய்யப்படும்'' என்றார்.
மீண்டும் மீண்டும் நினைவூட்டல்கள்
மேலும் தொடர்ந்து பேசிய பிரத்யுமான் சிங், ''மீண்டும் மீண்டும் நினைவூட்டல்கள் மற்றும் அறிவிப்புகள் இருந்தபோதிலும், அதிக எண்ணிக்கையிலான ஓட்டுநர்கள் வேகமாக வாகனம் ஓட்டுதல், சிவப்பு விளக்குகளை மீறுதல் மற்றும் ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டுதல் போன்ற விதிமீறல்களுக்கு அபராதம் செலுத்தாமல் அலட்சியமாக உள்ளனர்.
விதியை மீறியவர்களுக்கு 15 நாட்களுக்குள் அபாரத தொகையை செலுத்துமாறு சண்டிகர் நிர்வாகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்படும். அப்போதும் அவர்கள் அபராதம் தவறினால் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். வாகனப் பதிவுச் சான்றிதழ் இடைநிறுத்தப்படும்'' என்று தெரிவித்தார்.
5க்கும் மேற்பட்ட அபராதங்கள்
''உங்கள் வாகனத்திற்கு பல முறை அபராதம் விதிக்கப்பட்டிருந்தால், நீங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நீங்கள் சரியான நேரத்தில் அபராதத்தை செலுத்தவில்லை என்றால், உங்கள் ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படலாம். ஒரு வாகன ஓட்டியின் பெயரில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட அபராதங்கள் நிலுவையில் இருந்தால், அவரது ஓட்டுநர் உரிமம் ரத்து செய்யப்படும். அவரது வாகனங்களின் பதிவுச் சான்றிதழ்களும் ரத்து செய்யப்படும்'' என சண்டிகர் நிர்வாகம் தெளிவுப்படுத்தியுள்ளது.
இது தவிர போக்குவரத்து விதிகளை மீறுபவர்களின் வாகனங்கள் 'பரிவர்த்தனை அல்லாதவை' எனக் குறிக்கப்படும். இது உரிமையை மாற்றுதல், பதிவுச் சான்றிதழைப் புதுப்பித்தல் (RC) மற்றும் அபராதம் செலுத்தும் வரை நகல் RC வழங்குதல் உள்ளிட்ட எந்தவொரு பரிவர்த்தனையையும் தடை செய்யும் என்றும் போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
உத்தரபிரதேச அரசும் அதிரடி
இதேபோல் உத்தரபிரதேச அரசும் மீண்டும் மீண்டும் போக்குவரத்து விதிமீறல்களில் சிக்கும் வாகன ஓட்டிகளின் லைசென்ஸ் ரத்து செய்யப்படும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை மீண்டும் மீண்டும் மீறும் ஓட்டுநர்களின் உரிமங்களை ரத்து செய்வது மட்டுமல்லாமல், வணிக வாகனங்களின் உரிமங்களையும் ரத்து செய்ய வேண்டும். போக்குவரத்து விதிகளை மீறும் பைக், கார் மற்றும் இ-ரிக்ஷா ஓட்டுநர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.