காவலர்கள் விதிக்கும் அபராதத்தில் இருந்து தப்பிக்க குஜராத்தை சேர்ந்த ஷா, ஹெல்மட் ஃபார்முலாவை அறிமுகம் செய்துள்ளார். 

புதிய மோட்டார் வாகனச் சட்டம், 2019 அமல் படுத்தப்பட்டு சாலை விதிகளை மீறுவோருக்கு பல்லாயிரம் ரூபாய் அபராதங்கள் விதிக்கப்பட்டு வருவதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர். இதற்கு தீர்வு காண நினைத்த குஜராத்தை சேர்ந்த ஒருவர் ‘ஹெல்மட் ஃபார்முலா'-வை கண்டுபிடித்துள்ளார்.

 

 

வடோதராவில் வசித்து வரும் ஆர்.ஷா, தனது லைசென்ஸ், வண்டியின் பதிவு நகல், காப்பீட்டு நகல் மற்றும் வாகனம் சார்ந்த பிற ஆவணங்களை தனது ஹெல்மட்டில் ஒட்டிவைத்துள்ளார். அபராதங்கள் விதிப்பதில் இருந்து தப்பிக்க வேண்டும் என்ற நோக்கில் ஷா, இதைச் செய்ததாக கூறுகிறார். ஷா, வண்டியின் ஆவணங்களை தனது தலைக்கவசத்தில் ஒட்டி வைத்திருக்கும் புகைப்படங்கள் சமூகசலைதளங்களில் வைரலாகி வருகிறது.  
 
இதுகுறித்து ஷா கூறும்போது, “வண்டி ஓட்டுவதற்கு முன்னர் நான் அணியும் முதல் பொருள் ஹெல்மட்தான். அதனால்தான் அதில் எனது அனைத்து ஆவணங்களையும் ஒட்டினேன். இப்படிச் செய்வதன் மூலம் யாரும் எனக்கு அபராதம் விதிக்க முடியாது” என்கிறார். செப்டம்பர் 1 ஆம் தேதி முதல் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்துள்ளது. அதன்படி அபராதங்கள் இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. சில அபராதங்கள் 10 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளன.