கேரளாவில் கொட்டி வரும் பேய் மழையால் அந்த மாநிலத்தில் உள்ள 10 க்கும் மேற்பட்ட மாவட்டங்கள் முற்றிலும் வெள்ளத்தில் மூழ்கிப் போயுள்ளன. பெரும்பாலான வீடுகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளது.  அம்மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பியதையடுத்து அவை திறந்துவிடப்பட்டுள்ளன.

கடும் மழை, வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட பிரச்சனைகளால் பொது மக்கள் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். பல்லாயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே தங்களைச் சுற்றி மழை வெள்ளம் சூழ்ந்திருந்தாலும்  கேரள மாநில மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகின்றனர். இதையடுத்து தமிழகத்தில் இருந்து கேரளாவுக்கு குடிநீர் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து  ஈரோடு மற்றும் செங்கல்பட்டில் இருந்து, மதுரை, நெல்லை வழியாக, நேற்று இரண்டு சரக்கு பெட்டிகளில், தலா, 2.8 லட்சம் லிட்டர் குடிநீர், திருவனந்தபுரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

செங்கல்பட்டு அருகே உள்ள பாலுார் ரயில் நீர் தயாரிப்பு மையத்தில் இருந்து, 26 ஆயிரத்து, 400, ஒரு லிட்டர் ரயில் நீர் பாட்டில்கள், சென்னை சென்ட்ரலுக்கு வந்துள்ளன. இவை, ரயில்களில், கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு, இன்று அனுப்பப்பட உள்ளன.

சென்னை, தண்டையார்பேட்டையில் இருந்து, காலி சின்டெக்ஸ் டாங்குகள், சரக்கு ரயிலில் இன்று, ஈரோடுக்கு அனுப்பப்படுகின்றன. அங்கு, தண்ணீர் நிரப்பப்பட்டு, திருவனந்தபுரத்துக்கு அனுப்பிவைக்கப்படும் என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.