இளம் இந்திய அணி அண்மையில் உலகக் கோப்பை வென்றது. இளம் இந்திய வீரர்களுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் பயிற்சி அளித்தார். இளம் இந்திய அணி உலகக் கோப்பை வென்றதை அடுத்து, பிசிசிஐ பாராட்டு தெரிவித்தது.

மேலும், டிராவிட்டுக்கு ரூ.50 லட்சமும், இந்திய அணி வீரர்களுக்குத் தலா ரூ.30 லட்சமும், அணி உதவியாளர்களுக்குத் தலா ரூ.20 லட்சமும் பரிசுத் தொகையாக வழங்கப்படும் என்று பிசிசிஐ அறிவித்தது. அணியின் உதவியாளர்களுக்கு இந்த பரிசுத் தொகை போதாது என்று ராகுல் டிராவிட் கூறவே, அவர்களது பரிசுத் தொகையை ரூ.25 லட்சமாக உயர்த்தி பிசிசிஐ ஞாயிறு அன்று அறிவித்தது.

இந்த நிலையில், ராகுல் டிராவிட்டின் பெருந்தன்மையைப் பாராட்டி, அவரது ரசிகர்கள் புதிய கோஷம் ஒன்றை டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். அவரை பிரதமர் பதவிக்குத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோஷமாக உள்ளது. இதற்காக #RahulDravidforPM என்ற ஹேஷ்டேக்கை உருவாக்கி, அதைப் பரப்பி வருகின்றனர். 

இதே கோரிக்கையை வலியுறுத்தி, டிராவிட் பிரதமராக வேண்டும் என டுவிட்டரில் அந்த ஹேஷ்டேக்கை டேக் செய்து வருகின்றனர். இதேபோல், பிரபல பாலிவுட் பாடகர் விஷால் தத்லானியும், டிராவிட் பிரதமராக வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். அவர்களின் இந்த டுவிட்டர் பதிவு தற்போது வைரலாகி வருகிறது.