draupadi is the world first feminist said bjp leader ram madhav

உலகின் முதல் பெண்ணியவாதி திரௌபதிதான் என பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ் தெரிவித்துள்ளார். அதை சுட்டிக்காட்டி நெட்டிசன்கள் பல்வேறு கருத்துகளை தெரிவித்து கிண்டலடித்து வருகின்றனர்.

பெண் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்ற வரையறைகளை தகர்த்து ஆணாதிக்க சமூகத்திலிருந்து பெண்களை விடுவித்து ஆணும் பெண்ணும் சமம் என்னும் நிலை ஓரளவிற்கு எட்டப்பட்டு விட்டது. எனினும் கிராமப்புறங்களிலும், ஆணாதிக்கம் கொண்ட சில ஆண்களின் மனதிலும் ஆணுக்கு பெண் நிகர் என்ற எண்ணத்தை காண முடியாத சூழல்தான் உள்ளது.

பெண்களின் சுதந்திரத்திற்காகவும் உரிமைக்காகவும் பெண்ணியவாதிகளிடமிருந்து குரல்கள் எழுந்துகொண்டுதான் இருக்கின்றன.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பாஜக பொதுச்செயலாளர் ராம் மாதவ், உலகின் முதல் பெண்ணியவாதி திரௌபதிதான். அவருக்கு 5 கணவர்கள். ஆனால் ஒருவரின் பேச்சைக்கூட திரௌபதி கேட்க மாட்டார். அவரது நண்பரான கிருஷ்ணாவின் பேச்சை மட்டும்தான் கேட்பார். அந்த வகையில், திரௌபதிதான் உலகின் முதல் பெண்ணியவாதி என ராம் மாதவ் பேசினார்.

ராம் மாதவின் இந்த கருத்தை நெட்டிசன்கள் கிண்டலடித்து பல்வேறு பதிவுகளிட்டு வருகின்றனர்.

ராம் மாதவின் கருத்தை சுட்டிக்காட்டி, முதன்முதலில் தலை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது பிள்ளையாருக்குத்தான் என ஒருவர் பதிவிட்டுள்ளார்.

5 பேரை திருமணம் செய்துகொள்ள கட்டாயப்படுத்தப்பட்ட திரௌபதியை பெண்ணியவாதி என ராம் மாதவ் குறிப்பிட்டுள்ளார். அப்படியென்றால் முதல் கிறுக்கர் யார்? என ஒருவர் பதிவிட்டுள்ளார்.