உலக முஸ்லீம் லீக் தலைவர் இந்தியா வருகை! பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் முக்கியச் சந்திப்பு
இந்தியா வரும் டாக்டர் அல்-இசா தனது பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரையும் சந்திக்க இருக்கிறார்.

முஸ்லீம் உலக லீக்கின் பொதுச்செயலாளர் ஷேக் முஹம்மது பின் அப்துல் கரீம் அல்-இசாவின் இந்தியப் பயணம் ஜூலை 10 ஆம் தேதி தொடங்கும் நிலையில், பொது சிவில் சட்டம் குறித்து முஸ்லிம்கள் மத்தியில் பதட்டம் நிலவுகிறது. அனைத்து மத சமூகங்களுக்கும் திருமணம், விவாகரத்து, தத்தெடுப்பு மற்றும் வாரிசுரிமை பற்றிய தனித்தனியான சட்டங்களுக்குப் பதிலாக இந்தச் சட்டம் கொண்டுவரப்படுகிறது.
இஸ்லாமிய உலகின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட மிதவாத தலைவரான டாக்டர் அல்-இசா, மதங்களுக்கிடையில் ஒற்றுமையைக் கட்டியெழுப்புவதற்கான அவரது கருத்துக்களுக்காக அறியப்பட்டவர். முஸ்லிம் அறிஞர்களுடனான அவரது சந்திப்புகளும் டெல்லியில் உள்ள அக்ஷர்தாம் கோயிலுக்குச் செல்வதும் சாதகமான சமிக்ஞைகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச்சூழலில் நாளை (ஜூலை 11ஆம் தேதி) டெல்லியில் குஸ்ரோ அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் அல்-இசாவும் கலந்துகொள்வது குறிப்பிடத்தக்கது. குஸ்ரோ அறக்கட்டளையின் ஒருங்கிணைப்பாளர் ஹபிசுர் ரஹ்மான், டாக்டர் அல்-இசா மற்றும் அஜித் தோவல் இடையேயான சந்திப்பு வானத்தில் இரண்டு நட்சத்திரங்கள் சந்தித்துகொள்வதைப் போன்றது என்று கூறுகிறார்.
“டாக்டர். ஷேக் முஹம்மது பின் அப்துல் கரீம் அல்-இசா, நன்கு அறியப்பட்ட சவூதி அறிஞரும், செல்வாக்கு மிக்க உலக முஸ்லீம் லீக்கின் பொதுச் செயலாளரும் ஆவார். அதே நேரத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்ம உலக அமைதி குறித்த பார்வையைக் கொண்டவர்" என்றும் ரெஹ்மான் குறிப்பிட்டார்.
ஜூலை 11ஆம் தேதி டாக்டர் இசா மற்றும் அஜித் தோவல் உரையாற்றும் அமைதி மாநாடு மத நல்லிணக்கத்தின் முக்கியத்துவத்தை நிரூபிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
அறக்கட்டளையின் தலைவர் சிராஜ் குரேஷி கூறுகையில், டாக்டர் அல்-இசாவின் வருகை இப்போது சவுதி தலைமையின் இந்தியா வருகைக்கு வழி வகுக்கும் என்கிறார். “இந்தியாவுடன் சவூதி அரேபியாவிற்கு இடையே அரசியல் மற்றும் ராஜதந்திர உறவுகள் வலுப்பெற்று வருகின்றன; கலாச்சார மற்றும் வணிக உறவுகளும் மேம்பட்டு வருகின்றன" என்று அவர் கருதுகிறார்.
டாக்டர் இசா மற்றும் தோவல் உரையாற்றும் மாநாட்டிற்கு அறிஞர்கள், முஸ்லீம் அமைப்புகள் மற்றும் நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பல்வேறு மதங்களின் பிரதிநிதிகள் அழைக்கப்பட்டுள்ளனர் எனவும் சிராஜ் குரேஷி கூறினார்.
டாக்டர் அல்-இசா செப்டம்பர் 2017 இல் வாடிகனுக்குச் சென்று, போப் பிரான்சிஸ் மற்றும் மறைந்த கார்டினல் ஜீன்-லூயிஸ் டூரான், உள்ளிட்டவர்களைச் சந்தித்துப் பேசினார். அதைத் தொடர்ந்து ஏப்ரல் 2018 இல், கார்டினல் டூரான் சவுதி அரேபியாவிற்குப் பயணம் மேற்கொண்டார்.
இந்தியா வரும் டாக்டர் அல்-இசா தனது பயணத்தின் போது, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி மற்றும் சிறுபான்மையினர் விவகார அமைச்சர் ஸ்மிருதி இரானி ஆகியோரையும் சந்திக்க இருக்கிறார். டெல்லியில் உள்ள ஜாமியா மசூதியில் வெள்ளிக்கிழமை தொழுகை நடத்தும் அவர், ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலுக்கும் செல்கிறார்.