சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வெளியூர் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து காய்கறி இறக்குமதி செய்யப்படுகிறது.  இந்நிலையில், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்தது.  இதனால் காய்கறி சந்தையில் அவற்றின் வரத்து குறைந்தது.  இவற்றில் எளிதில் அழுக கூடிய வெங்காயத்தின் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வந்தது.

தொடர்மழை, விளைச்சல் மற்றும் வரத்து குறைவு, ஆகியவற்றால் கோயம்பேடு காய்கறி சந்தையில் வெங்காயத்தின் விலை உயர்ந்துள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் இறுதியில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய வெங்காயம் எனப்படும் பல்லாரி வெங்காயம் விலை உயர தொடங்கியது.  தமிழகத்தின் கோவை உள்ளிட்ட பகுதிகளில் சந்தையில் ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ.50 முதல் ரூ.60 வரை விற்பனை ஆனது. அதுவே காய்கறி கடைகளில் வெங்காயம் ரூ.70 வரை விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் கடந்த அக்டோபர் இறுதியில் கிலோ ரூ.25க்கு விற்பனை செய்யப்பட்ட வெங்காயம் திடீரென நவம்பர் மாத தொடக்கத்தில் 3 மடங்கு உயர்ந்து ரூ.80க்கு விற்கப்பட்டது.  இதனால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  சென்னை உள்பட பிற நகரங்களிலும் இந்த விலை உயர்வு இருந்தது.

இதன்பின் தமிழகம் முழுவதும் உள்ள பண்ணை பசுமை நுகர்வோர் கடைகளில் அரசு கொள்முதல் செய்த வெங்காயத்தை வெளிச்சந்தையைவிட குறைவாக ஒரு கிலோ ரூ.30, ரூ.40 விலையில் 2 ரகங்களில் விற்பனை செய்ய அரசு ஏற்பாடு செய்தது.  சென்னை உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள 79 பண்ணை பசுமை நுகர்வோர் கடைகள் மூலமாக வெங்காயம் விற்பனை செய்யப்பட்டது.

எனினும் வெங்காய விலை தொடர்ந்து உயர்ந்து ரூ.100ஐ தொட்டது.  பின்னர் ரூ.120க்கும், ரூ.160க்கும் விலை உயர்ந்தது.  விலை உயர்வை ஈடுகட்ட மத்திய அரசாங்கம் வெளிநாடுகளில் இருந்து 1 லட்சத்து 20 ஆயிரம் டன் வெங்காயத்தை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

இந்நிலையில், சென்னை கோயம்பேட்டில் விற்கப்பட்டு வந்த பெரிய வெங்காயம் ஒரு கிலோ ரூ.160ல் இருந்து ரூ.180 ஆகவும், சின்ன வெங்காயம் ரூ.180ல் இருந்து ரூ.200 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில் சில்லறை விலையாக பெரிய வெங்காயம் 200 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் 220 ரூபாய்க்கும் விற்பனைன செயப்படுகிறது, இது பொது மக்களை கலக்கமடையச் செய்துள்ளது.