dont wait in front of the bank for the education loan

பொறியியல், மருத்துவம் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்புகளுக்கு கடன் பெற இனி வங்கி வாசலில் மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் கால்வலிக்க காத்திருக்க வேண்டாம்.

அதற்கு பதிலாக கல்விக்கடனுக்காகவே ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தை மத்திய அரசு உருவாக்கியுள்ளது. இந்த தளத்தில் மூலமே இனி அனைத்து கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களும் அனுப்பப்பட வேண்டும். மாறாக எந்த வங்கியும் தனிப்பட்ட முறையில் கல்விக்கடனுக்கான விண்ணப்பங்களை பரிசீலிக்க தேவையில்லை என உத்தரவிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக கடந்த 21-ந்தேதி மத்திய நிதி அமைச்சகம் அனைத்து அரசு வங்கிகளுக்கும், நிதி நிறுவனங்களுக்கும் உத்தரவிட்டுள்ளது. அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களையும், ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளம் வாயிலாகவே பரிசீலனை செய்ய வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

ஆதலால், இனிமேல், 12-வகுப்பு முடித்த வசதியில்லா ஏழை மாணவ, மாணவிகள் பொறியல், மருத்துவ படிப்புக்கும், பட்டமேற்படிப்புகள் படிக்க கடன் பெற வங்கியில் வரிசையில் நிற்க வேண்டிய அவசியம் இல்லை.

இந்த ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தில் சென்று, அதில் உள்ள கல்விக்கடனுக்கான விண்ணப்பத்தில் உள்ள விவரங்களை பூர்த்தி செய்து, எந்த வங்கி மூலம் கல்விக்கடன் வேண்டும் என்ற தகவலையும் தெரிவித்து அதை அனுப்பிவைக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் முறைப்படி பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு, கல்விக்கடன் குறித்த அழைப்பு வங்கி மூலம் சம்பந்தப்பட்ட மாணவருக்கு கடிதமாக அனுப்பப்படும். இந்த திட்டம் இந்த ஆண்டில் இருந்து செயல்பாட்டுக்கு வந்துள்ளது.

இது குறித்து கோவையில் உள்ள ஒரு முன்னணி வங்கியின் மேலாளர் ஏ. கனகராஜ்கூறுகையில், “ ‘பிரதமர் வித்யா லட்சுமி கார்யகிரம்’ எனும் இணையதளத்தின் மூலமே அனைத்து கல்விக்கடன்களுக்கான விண்ணப்பங்களும் பரிசீலிக்கப்பட வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக மாணவர்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கப்பட வேண்டும்’’ எனத் தெரிவித்தார்.