மருத்துவச் செலவுக்காக வருங்கால வைப்பு நிதியிலிருந்து (பி.எப்.) பணம் பெறுவதில் முன்பிருந்த நடைமுறைகளை நீக்கி தொழிலாளர் நலத்துறை வழிவகை செய்துள்ளது.

இதன்படி, தொழிலாளர்கள் தங்கள் பி.எப். கணக்கில் உள்ள பணத்தை மருத்துவச் செலவுக்காக எவ்வித கெடுபிடியும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம்.

இதற்கு முன்னர் ஒருவர் தனது மருத்துவச் செலவுக்காக பி.எப். நிதியிலிருந்து பணம் பெற வேண்டும் என்றால், அவர் பணிபுரியம் நிறுவனத்திடம் பெறப்பட்ட அனுமதி கடிதத்தையும், டாக்டர் சான்றிதழையும் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். இதில் நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக அதிருப்தி தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தொழிலாளர்கள் தங்கள் பி.எப். கணக்கில் உள்ள பணத்தை மருத்துவச் செலவுக்காக எவ்வித கெடுபிடியும் இல்லாமல் எடுத்துக் கொள்ளலாம். தங்களுக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து தாங்களே ஒரு சுய பிரகடன அறிக்கையை தாக்கல் செய்து இச்சலுகையைப் பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மாற்றுத் திறனாளிகள் தங்களுக்கான உபகரணங்களை வாங்குவதற்கும் டாக்டர் சான்றிதழ் அளிக்கத் தேவையில்லை. இதற்கான அறிவிக்கை ஏப்ரல் 25-ந் தேதி வெளியிடப்பட்டுள்ளது.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதியிலிருந்து இந்த சலுகைகளைப் பெற முன்னர் இருந்த கெடுபிடிகள் தற்போது வெகுவாக தளர்த்தப்பட்டுள்ளன. முன்பு மூன்று படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டியிருந்தது. இப்போது ஒரே படிவத்தில் பணத்தை கோரி விண்ணப்பிக்க முடியும்.