பணிக்கு திரும்பாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மும்பை உயர் நீதிமன்றம் எச்சரித்த நிலையில் மஹாராஷ்டிராவில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வந்த மருத்துவர்கள் போராட்டம் நேற்று வாபஸ் பெறப்பட்டுள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் தங்களது பணிக்கு திரும்பினர்.

4,500 மருத்துவர்கள்

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் இயங்கி வரும் சியோன் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி நோயாளி ஒருவர் உயிரிழந்தார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது உறவினர்கள் மருத்துவரின் தவறான சிகிச்சையே மரணத்திற்கு காரணம் என்று கூறி சிகிச்சை அளித்த மருத்துவரை தாக்கினர்.

இந்த விவகாரம் மாநிலம் முழுவதும் மருத்துவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து கடந்த திங்கள் முதல் 4,500-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணிக்கு செல்லாமல் விடுப்பில் இருந்து வந்தனர்.

நோயாளிகள் பாதிப்பு

மருத்துவர்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வந்த நிலையில், மஹாராஷ்டிராவில் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களுக்கு மற்ற மாநில மருத்துவர்களும் ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில் 4,500 மருத்துவர்கள் பணிக்கு செல்லாததால் நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

உயிரிழப்பு சம்பவங்கள் நேர்ந்ததால் மாநில அரசு கடும் நெருக்கடிக்கு ஆளானது. இதையடுத்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மருத்துவர்களை பணிக்கு திரும்புமாறு கேட்டுக் கொண்டார்.

மேலும், மருத்துவர்களின் பாதுகாப்புக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2 நாட்களுக்கு முன்பாகவே முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ் உறுதி அளித்திருந்தார்.

நீதிமன்றத்தில் வழக்கு

இதற்கிடையே, நோயாளிகள் கடுமையாக பாதிக்கப்பட்டதால், இந்த விவகாரம் தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில் மருத்துவர்களின் பாதுகாப்புக்காக 1,100 போலீசார் கூடுதலாக நியமிக்கப்படுவார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண் நீதிமன்றம் மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என உத்தரவிட்டது. ஆனால், இதனையும் மீறி மருத்துவர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த நிலையில், நேற்று முன்தினம் சட்டப்பேரவையில் பேசிய முதல் அமைச்சர் தேவேந்திர பட்னாவீஸ், ‘மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை இத்துடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். அவர்கள் போராட்டத்தை தொடர்ந்தால் அதனை மாநில அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. நோயாளிகள் உயிரிழப்பதற்கு நாங்கள் அனுமதிக்க மாட்டோம்’ என்றார்.

கடும் நடவடிக்கை

அதேநேரத்தில் மும்பை உயர் நீதிமன்றம், ‘மருத்துவர்களுக்கு கால அவகாசம் அளிக்கப்படுவதை தங்களுக்கு சாதகமாக அவர்கள் எடுத்துக் கொள்ளக் கூடாது. மருத்துவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால் அவர்கள் மீது மருத்துவமனை நிர்வாகம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியது.

இந்த எச்சரிக்கைகளை தொடர்ந்து மகாராஷ்டிராவில் போராட்டத்தில் ஈடுபட்ட 4,500 மருத்துவர்கள் வேலை நிறுத்த போராட்டத்தை நேற்று வாபஸ் பெற்றுக் கொண்டனர்.