12 வயதில் விழுங்கிய டூத் பிரஷ், 52 ஆண்டுகளுக்குப் பிறகு 64 வயது சீனரின் குடலில் இருந்து அகற்றப்பட்டது. சமீபத்தில் வயிற்று வலியுடன் மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்கள் அவரது குடலில் டூத் பிரஷ் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர்.
சீனாவில் வயிற்றில் ஏதோ வித்தியாசமான உணர்வு இருப்பதாகக் கூறி மருத்துவரை அணுகிய 64 வயது முதியவருக்கு வயிற்றில் இருந்து ஒரு டூத் பேஸ் அகற்றப்பட்டுள்ளது! 12 வயதாக இருந்தபோது அவர் விழுங்கிய ஒரு டூத் பிரஷ் 52 ஆண்டுகளாக குடலில் சிக்கி இருந்ததை அறிந்து மருத்துவர்கள் அதிர்ச்சியில் அடைந்தனர்.
யாங் என அடையாளம் காணப்பட்ட அந்த முதியவர், தான் 12 வயதாக இருந்தபோது பல் துலக்கும் பிரஷை விழுங்கியது நினைவுக்கு வருவதாகத் தெரிவித்தார். சமீபத்தில், அவர் வயிற்று வலியுடன் மருத்துவமனைக்குச் சென்றபோது, மருத்துவர்கள் அவரது குடலில் டூத் பிரஷ் சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர் என்று சவுத் சைனா மார்னிங் போஸ்ட் (SCMP) செய்தி வெளியிட்டுள்ளது.
குழந்தையாக இருந்தபோது விழுங்கிய பிரஷ்:
குழந்தையாக இருந்தபோது, நடந்ததைப் பற்றி பெற்றோரிடம் சொல்ல பயந்ததாகவும், டூத் பிரஷ் தானாகவே கரைந்துவிடும் என்று நம்பியதாகவும் யாங் தெரிவித்துள்ளார். ஆச்சரியப்படும் விதமாக, அவருக்கு சமீப காலம் வரை வயிற்றில் இருந்த டூத் பிரஷ்ஷால் எந்தவிதமான அசௌகரியமும் ஏற்படவில்லை.
அவரது செரிமான மண்டலத்தை பரிசோதித்த மருத்துவர்கள், 17 சென்டிமீட்டர் நீளமுள்ள டூத் பிரஷை அவரது சிறுகுடலில் உறுதியாக சிக்கியிருப்பதைக் கண்டுபிடித்தனர். எண்டோஸ்கோபிக் அறுவை சிகிச்சை மூலம், வெறும் 80 நிமிடங்களில் அந்த பிரஷ்ஷை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். கடந்த மூன்று ஆண்டுகளில் மருத்துவமனையில் ஒரு நோயாளியின் செரிமான மண்டலத்தில் இருந்து அகற்றப்பட்ட மிக நீளமான பொருட்களில் இதுவும் ஒன்று என்று SCMP செய்தியில் கூறப்பட்டுள்ளது.
பெரிய பொருளை விழுங்குவதில் உள்ள ஆபத்து:
இவ்வளவு பெரிய பொருளை விழுங்குவதன் ஆபத்துகளை மருத்துவர்கள் எடுத்துரைத்துள்ளனர். சாதாரண சூழ்நிலைகளில், பிரஷ் சுழலலாம், அது உள் திசுக்களை அழுத்தலாம். குடலைத் துளைத்து உயிருக்கு ஆபத்தான குடல் துளையை ஏற்படுத்தலாம். இதனால் யாங்கின் உயிர் பிழைத்ததே நம்பமுடியாத அதிர்ஷ்டம் என்று என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர். பிரஷ் அவரது குடலில் பாதுகாப்பாக சிக்கி இருந்ததால், 50 ஆண்டுகளுக்கும் மேலாக நகராமல் இருந்துள்ளது என்றும் மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இதற்கிடையில், இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலானது. பெரும்பாலான பயனர்கள் முதியவரின் செயலையும் அதிர்ஷ்டத்தையும் அறிந்து அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
