கடந்த ஒரு மாதத்தில் 12 மணி நேரத்திற்கு ஒருவர் ‘என்கவுண்ட்டர்’ நடக்கும் பா.ஜனதா மாநிலம் உத்தரப்பிரதேசமாகும்.

உத்தரப்பிரதேசத்தில், யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது.

அவர் ஆட்சி பொறுப்பு ஏற்றதும், குற்றங்களை தடுப்பதற்காக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். கொடுங்குற்றங்களில் ஈடுபடும் கிரிமினல்களை ‘என்கவுண்ட்டர்’ மூலம் சுட்டுக்கொல்லவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கடந்த மார்ச் 20-ம் தேதி முதல் செப்டம்பர் 18 வரை 431 என்கவுன்டர்கள் நடத்தப்பட்டுள்ளதாகவும், இதில் 17 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். வரும் காலங்களிலும் இந்த நடவடிக்கை தொடரும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

உ.பி., அரசு வெளியிட்டுள்ள புள்ளிவிபரத்தின்படி, ஒவ்வொரு 12 மணிநேரத்திற்கு ஒரு என்கவுன்டர் வீதம் மொத்தம் 430 க்கும் அதிகமான என்கவுண்ட்டர்கள் நடத்தப்பட்டுள்ளது.

இத்தகைய என்கவுன்டரில் ஈடுபட்ட மாவட்ட போலீஸ் குழுவிற்கு ரூ.1 லட்சம் வரை பரிசையும் உ.பி. அரசு அறிவித்திருந்தது.

குற்றவாளிகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ள போலீசாருக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

போலீசார் சுதந்திரமாக தங்களின் அதிகாரத்தை பயன்படுவதால் மக்கள் தற்போது பாதுகாப்பாக உள்ளனர் என, தனது அரசின் 6 மாத கால செயல்பாட்டை விளக்கும் பத்திரிகையாளர் சந்திப்பின்போது, முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

உ.பி.யில் நடந்த இந்த என்கவுண்ட்டர் சம்பவங்களில் 17 குற்றவாளிகள் கொல்லப்பட்டுள்ளனர். 88 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 1106 குற்றவாளிகள் பிடிபட்டுள்ளனர்.

அதே நேரத்தில், இது பா.ஜ., அரசின் அடக்குமுறை எனவும், இது ஆபத்தின் உச்சம் எனவும் விமர்சித்துள்ள எதிர்க்கட்சிகள், என்கவுண்ட்டர் தொடர்பாக பல்வேறு கேள்விகளையும் எழுப்பி உள்ளன.