நாம் கணக்கு வைத்து இருக்கும் வங்கியின் சேவை பிடிக்கவில்லையா? கவலை வேண்டாம், இனி வேறு வங்கிக்குக்கு எளிதாக மாறலாம், அதிலும் வங்கிக்கணக்கு எண்ணை மாற்றாமல் மாறலாம்.

தற்போது மொபைல் எண்ணை மாற்றுவதில் மட்டுமே இருக்கும் இந்த வசதியை வங்கிச் சேவையிலும் கொண்டு வர ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.

இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “ தொலைத் தொடர்பு நிறுவனங்களின் வாடிக்கையாளர்கள் செல்போன் எண்ணை மாற்றாமல்,சேவைதாரரை மாற்றுவதுபோல், வங்கியிலும் கொண்டு வரப்பட உள்ளது. இதன்படி, வங்கி வாடிக்கையாளர்களும் வங்கியின் சேவை பிடிக்காவிட்டால், வங்கிக்கணக்கை முடித்துவிட்டு அடுத்த வங்கியின் சேவையை தேடிச் செல்லத் தேவையில்லை. வங்கிக்கணக்கை மாற்றாமல், வங்கியை மட்டும் மாற்றும் திட்டம்  செயல்படுத்தப்பட உள்ளது.

இதற்காக அனைத்து வங்கிகளிடமும் ‘அக்கவுண்ட் நம்பர் போர்ட்டபிலிட்டி’ திட்டத்தை தயாரிக்க அறிவுறுத்தியுள்ளோம். ஆதார் எண்ணை வங்கிக்கணக்குடன் இணைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது, இதன் மூலம் இந்த திட்டத்தை செயல்படுத்துவது எளிதாகும்.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துவிட்டால், வாடிக்கையாளர் ஒருவர், வங்கிக்கணக்கை முடித்துவிட்டு, அடுத்த வங்கிக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை, எளிதாக வங்கிக்கணக்கை மாற்றாமல் அடுத்த வங்கியின் சேவையை நாடலாம்’’ எனத் தெரிவித்தார்.