வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கு உடனே தேர்தல் நடத்த வேண்டும் என்று அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் வலியுறுத்தியிருந்த நிலையில், திமுகவும் அதே கோரிக்கையை தலைமை தேர்தல் ஆணையத்தில் வைத்துள்ளது.


வேலூர் தொகுதியில் திமுக பிரமுகர்களுக்கு சொந்தமான இடங்களில் நடந்த ரெய்டில் 11.53 கோடி ரூபாய் கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து வாக்குப்பதிவுக்கு ஒரு நாள் முன்பாக வேலூரில் தேர்தலை ரத்து செய்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டார். இந்நிலையில் தமிழகத்தில் காலியாக உள்ள 4 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19 அன்று தேர்தல் நடைபெற உள்ளது. அன்றைய தினத்தில் வேலூர் தொகுதிக்கும் தேர்தல் நடத்தும்படி அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் நேற்று முன் தினம் மனு அளித்திருந்தார்.
இந்நிலையில் திமுகவும் வேலூரில் உடனே தேர்தல் நடத்தும்படி தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்துள்ளது. திமுக எம்.பி.க்கள் திருச்சி சிவா, ஆர்.எஸ்.பாரதி, வேலூர் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் ஆகியோர் தலைமை தேர்தல் ஆணையத்தில் மனு அளித்தார்கள்.


மனு அளித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய திருச்சி சிவா, “வேலூர் நாடாளுமன்றத் தேர்தலை  தள்ளி போடக்கூடாது. இந்தத் தேர்தல் அட்டவணையிலேயே வேலூரில் தேர்தலை நடத்த வேண்டும். எங்கள் கோரிக்கையைப் பரிசீலிப்பதாக தேர்தல் ஆணையம் கூறியுள்ளது” என்று தெரிவித்தார். மேலும் மதுரையில் வாக்குப்பதிவு மையத்துக்குள் சென்ற தாசில்தார் பின்னணியில் செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்தில் திமுக கோரியுள்ளது.