தொடங்கியது திமுக முப்பெரும் விழா: மக்களுடன் ஸ்டாலின் செயலி தொடக்கம்!
திமுகவின் முப்பெரும் விழா வேலூரில் தொடங்கியது. மக்களுடன் ஸ்டாலின் செயலியை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
திமுக சார்பில் முப்பெரும் விழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. செப்டம்பர் 15ஆம் தேதி பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டும், செப்டம்பர் 16ஆம் தேதி திராவிட முன்னேற்றக் கழகம் தொடங்கப்பட்ட நாளையும், செப்டம்பர் 17ஆம் தேதி மறைந்த தந்தை பெரியாரின் பிறந்த நாளையும் சேர்த்து முப்பெரும் விழாவாக திமுகவினர் உற்சாகமாக கொண்டாடுவர்.
அந்த வகையில், நடப்பாண்டு திமுக பவள விழாவுடன் கூடிய முப்பெரும் விழா இன்று வேலூரில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கியது கோலாகலமாக தொடங்கியது வேலூர் மாவட்டத்தில் அணைக்கட்டு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பள்ளிகொண்டா பகுதியில் நடைபெறும் திமுக முப்பெரும் விழாவில் அக்கட்சியின் அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள், தலைமை நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டுள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். எல்லோருக்கும் எல்லாமும் கிடைத்தாக வேண்டும் என்ற திராவிட கோட்பாட்டின்படி 'மக்களுடன் ஸ்டாலின்' என்ற செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள், முதியோர், பெண்கள், பட்டதாரிகள், இளைஞர்கள் என்று யாருக்கு எந்தத் திட்டம் தேவை என்பதை எளிதாக அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை: ரூ.10,000 நிதியுதவு - மத்திய அரசு முடிவு!
செயலியின் ஒரு பிரிவில் 'உங்கள் திட்டங்கள்' என்ற பொத்தான் இருக்கும். பொது மக்கள் பதிவு செய்யும் சுயவிவரத்தைப் பொறுத்து, எது பொருந்துமோ அந்த திட்டங்கள் சார்ந்த தகவல்களை இந்த செயலியின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம். திமுக மக்களுக்கு என்ன செய்தது என்றும், தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது என்றும் ஒவ்வொரு தொகுதியைப் பற்றியும் முழுதாக தெரிந்து கொள்ளலாம். மேலும், 234 தொகுதிகளைப் பற்றிய அரசின் திட்டங்கள் சார்ந்த முழு தகவல்கள் இருக்கும்.
இச்செயலியில் தமிழ்நாடு அரசின் நடவடிக்கைகள் பற்றியும், முதலமைச்சரின் களச் செயல்பாடுகள் பற்றியும் பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். முதலமைச்சர் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் முதல் கட்சி உறுப்பினர்கள் வரை அனைவரிடமும் பொதுமக்களே கேள்விகளைக் கேட்கலாம். முதலமைச்சர் மற்றும் மாவட்டச் செயலாளர்கள் என யாரிடம் வேண்டுமென்றாலும் இந்த செயலின் வாயிலாகப் பொதுமக்கள் அழைத்துப் பேசலாம்.